இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடியிருந்தார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வர் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராகவும் திகழ்ந்திருந்தார். ஆனால் அந்த உலகக்கோப்பை தொடரில் கணுக்கால் காயத்துடன் விளையாடி இருந்த அவர் அந்த தொடர் முடிவடைந்ததுமே தனது காயத்திற்கான அறுவை சிகிச்சையை லண்டன் சென்று மேற்கொண்டிருந்தார்.
முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை :
அதன் பின்னர் கடந்த 14 மாதங்களாக மீண்டும் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தின் போது அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று நடைபெற்ற இந்த முதல் டி20 போட்டியின் போதும் பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறவில்லை. இதன் காரணமாக அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய முதல் டி20 போட்டியில் முகமது ஷமி ஏன் விளையாடவில்லை? என்பது குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா பேசுகையில் கூறியதாவது : முகமது ஷமி இந்த முதல் போட்டியில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் பார்த்தவரை அவர் பயிற்சியின் போதும் ஓடுவதில் சிரமத்தை சந்தித்தார்.
அதோடு சற்று நொண்டி நொண்டி அவர் சென்று கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை என்று நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது ஷமி முக்கியமான வீரராக விளையாட இருக்கிறார். அதன் காரணமாகவும் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : முதல் டி20 போட்டி முடிந்த பின்னர் யுஸ்வேந்திர சாஹலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ
அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் போட்டியில் விளையாடினால் நிச்சயம் அவருக்கு அது மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதன் காரணமாகவே அவர் முன்னெச்சரிக்கையாக அவர் இந்த போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம் என பியூஷ் சாவ்லா கூறியது குறிப்பிடத்தக்கது.