
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்ததால் தற்போது அனைத்து நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ இந்த டி20 தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடரில் முன்னாள் கேப்டனான தோனி ஆலோசகராக பங்கேற்க உள்ளதால் இந்திய ரசிகர்கள் பெரிதளவு மகிழ்ச்சியில் உள்ளனர். அதேவேளையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரரான நடராஜன் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக நிச்சயம் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படாதது குறித்து எழுந்த கேள்விக்காக பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா நடராஜன் நீக்கம் குறித்து பேசுகையில் : நடராஜன் பெயரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் விவாதிக்கப்பட்டது.
ஆனால் அவர் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவரை அணியில் சேர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் மைதானங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதனால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நடராஜனுக்கு இடம் அளிக்க முடியவில்லை என்று தனது தெளிவான தகவலை வெளியிட்டார். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தாலும் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் பாதியில் காயமடைந்து வெளியேறிய நடராஜன் தற்போதுதான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் நடராஜன் ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதாலும் அவர் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணி அறிவித்துள்ள இந்தப் 15 பேர் கொண்ட பட்டியலில் நடராஜன் பெயர் இடம்பெறாதது பெரும்பாலானோருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.