நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று இரவு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
மேலும் அந்த அணியின் புதிய கேப்டனாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவலை கொல்கத்தா அணி நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது வரை கொல்கத்தா அணி 7 போட்டிகளில் பங்கேற்று நான்கு வெற்றி மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு இயான் மோர்கன் அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மோர்கன் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது திடீரென அதிரடி அறிவிப்பாக தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி கூறுகையில் : கொல்கத்தா அணியை தினேஷ் கார்த்திக் திறம்பட வழிநடத்தி வந்தார். தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் அவரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவரது அறிவிப்பை ஏற்றுக்கொண்டோம். என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஏன் கேப்டன் பதவியில் விலகினார் ? என்பது குறித்த தெளிவான தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி இந்த தொடரின் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15.42 சராசரியுடன் 108 ரன்களை மட்டுமே அளித்துள்ளார். இதனால் அவர் பேட்டிங்கின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மார்கன் 18 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.
இந்த சூழலில் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும் மோர்கனை கேப்டன் பதவியில் கொண்டுவரவும் அதிக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதனாலேயே தினேஷ் கார்த்திக் தற்போது தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி கிட்டத்தட்ட மறைமுக காரணத்தோடு கேப்டன் பதவியை துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.