இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஆர்.சி.பி வீரர்.. யார் இந்த ஆகாஷ் தீப்? – தேர்வாக என்ன காரணம்?

Akash-Deep
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சியிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறாத வேளையில் ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பிருப்பது பலத்தை சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் இதுவரை பெரிய அளவில் பேசப்படாத இவருக்கு நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்க என்ன காரணம்? என்ற கேள்வியும் அதிகளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் யார் இந்த ஆகாஷ் தீப்? அவர் இப்படி இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட என்ன காரணம்? என்பது குறித்த முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் 27 வயதான பெங்காலை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியில் இடம் பிடித்து 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அனுபவம் குறைந்த வீரராகவே இருந்தாலும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அவர் பெங்கால் அணிக்காக தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவரது பந்துவீச்சினை தொடர்ந்து கவனித்து வந்த தேர்வுக்குழு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவரை தேர்வு செய்திருந்தது. அந்த தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்திய அணியுடன் பயணித்திருந்தார். அதேபோன்று அதற்கு அடுத்து தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராகவும், அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது மூன்று போட்டியில் பங்கேற்ற அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் குறிப்பாக இரண்டு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அது தவிர்த்து பேட்டிங்கிலும் கீழ் வரிசையில் களமிறங்கி கை கொடுக்கும் அளவிற்கு விளையாடி வரும் அவரை நீண்ட நாட்களாக தேர்வுக்குழு கவனித்து வந்தது.

இதையும் படிங்க : எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் முற்றிலுமாக வெளியேறிய விராட் கோலி – பி.சி.சி.ஐ வெளியிட்ட காரணம்

இந்நிலையில் அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டிற்கு காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு ஆகியோர் வழங்கியுள்ளனர். ஏற்கனவே இந்திய அணியில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருவதால் நிச்சயம் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் அவர்கள் இருவரில் ஒருவருக்கு பதிலாக நிச்சயம் ஆகாஷ் தீப்பிற்கு அறிமுக வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement