
இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது கிட்டத்தட்ட பாதி தொடரை கடந்து விட்டது. ஏற்கனவே 8 அணிகளுடன் நடைபெற்று வந்த இந்த தொடரானது இந்த ஆண்டு 10 அணிகளுடன் நடைபெற்று வருவதால் ஒவ்வொரு நாளும் போட்டி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் மேலும் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி வாய்ப்பினை பெற்று விளையாடி வரும் இளம் வீரர்கள் பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான குல்தீப் சென் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக விளையாடி அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார் என்று கூறலாம். ஏனெனில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் 3.3 ஓவர்களை வீசி வெறும் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதோடு லக்னோ அணிக்கு எதிராக இவர் அறிமுகமான போட்டியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் என்ற தேவை என்ற நிலையில் இருந்தபோது கச்சிதமா பந்து வீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இப்படி மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் தற்போது ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு புயலாக இவர் உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அவரது வாழ்க்கை கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மத்திய பிரதேசம் மாநிலம் ஹரிஹர்புர் பகுதியைச் சேர்ந்த குல்தீப் சென் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி பிறந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருடைய அப்பா ஒரு சிறிய சலூன் கடைக்காரர் தான். அதோடு இவரது குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவரும் ஒருவர் என்பதால் சற்று சிரமமான ஏழ்மையான வாழ்க்கையே இவர் இதுவரை வாழ்ந்துள்ளார்.
தனது சிறிய வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர் எட்டு வயதில் இருந்தே பந்துவீச்சு பயிற்சி எடுத்து வருகிறார். அவரது திறமையையும், ஆர்வத்தையும் கண்ட உள்ளூர் பயிற்சியாளர்கள் அவருக்கு கட்டணம் எதுவும் வாங்காமல் பந்துவீச்சு பயிற்சி கொடுத்து வந்தனர். இப்படி சிறிது சிறிதாக தனது திறமையை அதிகரித்த படிப்படியாக மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அதன்பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 22-வது வயதில் மத்தியபிரதேச அணிக்கான ரஞ்சி போட்டிகளில் விளையாட குல்தீப் சென் தேர்வானார். அதன்படி அந்த முதல் சீசனிலேயே அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருந்தார்.
இருந்தாலும் அவருக்கு அப்போது ஐபிஎல் வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கிய அவர் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் அவுட் ஸ்விங், யார்க்கர், பவுன்சர் என அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்த தொடங்கினார். இப்படி தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இவர் கடந்த ஆண்டு உள்நாட்டு டி20 தொடரில் தனது அற்புதமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு திரும்புவது குறித்து என்ன நெனைக்குறீங்க? – அதிரடியான பதிலை அளித்த ஹர்டிக் பாண்டியா
இதன் காரணமாக இந்த 15-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலைக்கே ராஜஸ்தான் அணிக்கு குல்தீப் சென் தேர்வானார். குறைந்த விலைக்கு தேர்வு செய்யப்பட்டாலும் இவரது சிறப்பான பந்து வீச்சில் தற்போது ராஜஸ்தான் அணி 2 போட்டிகளை வென்று உள்ளது என்றே கூறலாம். நிச்சயம் இவரும் இனி வருங்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி.