ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. சாத்தியமே இல்லாத போட்டியாக பார்க்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வெற்றி பெற்றது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
நேரடியாக தகுதிபெற இருக்கும் இந்திய அணி :
இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதில் மூன்று போட்டிகள் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 5 போட்டிகள் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் இந்திய அணி இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் எத்தனை போட்டிகளில் வெற்றிபெற வேண்டும்? என்பது குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலை இங்கு காணலாம்.
அந்த வகையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். நியூசிலாந்து அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய தொடரை பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி விளையாடலாம்.
ஒருவேளை நியூசிலாந்து தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) அல்லது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றினால் ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் ஒன்று, இரண்டு வெற்றிகள் தேவைப்படலாம். எனவே ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணியை வாஷ்அவுட் செய்தால் இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோரது அந்த முடிவு தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் – பிளான் என்ன?
ஏற்கனவே இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்த இந்திய அணி இம்முறை கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டிய முனைப்புடன் மும்முரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.