இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தார். அந்த நிலையில் தற்போது தமக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி விடை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 14 வருடங்களில் 123 போட்டிகளில் விளையாடி 9270 ரன்களை 46 என்ற நல்ல சராசரியில் அடித்துள்ளார். மேலும் 30 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அத்துடன் 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் இந்தியா 40 வெற்றிகளைப் பெற்று அசத்தியது.
உலகத்துக்கே இழப்பு:
குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. மொத்தத்தில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட்டை விட உலக கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
அத்துடன் 2016 – 2021 வரை விராட் கோலி தலைமையில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக எதிரணிகளை சொல்லி அடித்தது. அந்தக் காலங்களில் மங்கிப்போன டெஸ்ட் போட்டிகள் விராட் கோலியால் மீண்டும் உயிர் பெற்றதாக மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். எனவே இந்திய ரசிகர்களை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் விராட் கோலியை மிஸ் செய்யும் என்றும் அவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
கிளார்க் பாராட்டு:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பலரும் மிஸ் செய்வார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விட அவரை யாரும் மிஸ் செய்யப் போவதில்லை. விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார். டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது”
இதையும் படிங்க: எங்க ராஜாவுக்கு நாங்க இருக்கோம்.. கிங் கோலியின் ஓய்வை மாஸாக கொண்டாட காத்திருக்கும் – ஆர்.சி.பி பேன்ஸ்
“விராட் கோலி அனைத்து கேப்டனும் தங்களுடைய அணியில் இருக்க விரும்பக்கூடிய வீரர். டெஸ்ட் கிரிக்கெட் அவரை மிஸ் செய்யும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



