டி20 உலககோப்பை 2022 : அனைத்து டாப் 8 அணிகளில் விளையாடும் 8 இளம் வீரர்களின் பட்டியல்

Arshdeep-Singh
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிகட்டமாக தயாராகி வருகின்றன. ரசிகர்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக கடந்த 2007ல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலக கோப்பைக்கு எப்போதும் தனித்துவமான மவுசு உள்ளது. ஏனெனில் என்னதான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் 20 ஓவர் போட்டிகளின் உண்மையான சாம்பியன் இந்தத் தொடரால் தான் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் 2007இல் நடைபெற்ற முதல் தொடரிலேயே அனுபவமில்லாத கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் அற்புதமாக செயல்பட்டு பைனலில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் யாருமே எதிர்பாராத திரில் வெற்றியை பெற்று இந்தியா கோப்பையை வென்றது யாராலும் மறக்க முடியாது.

அந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி போன்ற சீனியர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் மேஜிக் நிகழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வரலாற்று வெற்றிக்கு தோனி முதல் யுவராஜ் வரை இளம் வீரர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்தது. அந்த வகையில் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் வருங்கால நட்சத்திரங்களாக டாப் 8 அணியில் இடம் பிடித்து விளையாடப்போகும் (சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ள 8 அணிகள் மட்டும்) இளம் வீரர்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்:

- Advertisement -

8. ஆப்கானிஸ்தான் – முகமத் சலீம்: 2002இல் பிறந்து ஆப்கானிஸ்தானுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்படும் வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாமலேயே நேரடியாக உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7. வங்கதேசம் – ஹசன் மஹ்முட்: 22 வயதாகும் இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் சமீபத்தில் வங்கதேசத்துக்காக அறிமுகமாகி இதுவரை 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை 6.58 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து வருகிறார். அதனால் உலக கோப்பையில் விளையாட தேர்வாகியுள்ள அவர் இளம் வங்கதேச வீரராக களமிறங்க உள்ளார்.

- Advertisement -

6. தென்ஆப்பிரிக்கா – ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ்: கடந்த 2000ஆம் ஆண்டில் பிறந்து வெறும் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் உள்ளூர் டி20 தொடரில் மிரட்டலாக செயல்பட்டதால் இந்த வருடம் தென் ஆப்பிரிக்காவுக்கு அறிமுகமானார். இதுவரை வெறும் 6 போட்டிகளில் 119 ரன்களை 216.14 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள இவர் இந்த உலகக் கோப்பை மட்டுமல்லாது வருங்கால தென்னாபிரிக்க அணியின் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.

5. பாகிஸ்தான் – நசீம் ஷா: எப்போதுமே தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க தவறாத பாகிஸ்தானின் அடுத்த வாரிசாக சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி அற்புதமாக பந்து வீசி வலியுடன் வெற்றிக்கு போராடிய இவரது ஆட்டம் அனைவரின் பாராட்டை பெற்றது. அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து வெற்றி பெற வைத்த இவர் இதுவரை 6 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை 7.66 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து வருகிறார்.

- Advertisement -

4. ஆஸ்திரேலியா – டிம் டேவிட்: சிங்கப்பூரில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கோப்பைக்கு தேர்வாகியுள்ள இவர் தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அறிமுகமாகி விளையாடி வருகிறார். தற்போது 25 வயதாகும் இவருக்கு தனது முதல் உலகக்கோப்பையை சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

3. நியூஸிலாந்து – பின் ஆலன்: 1999இல் பிறந்த இவர் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டதால் நியூசிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். இதுவரை 13 போட்டிகளில் 334 ரன்களை 169.54 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள இவர் இந்த உலக கோப்பையில் இளம் நியூசிலாந்து வீரராக களமிறங்க தயாராகியுள்ளார்.

2. இங்கிலாந்து – ஹரி ப்ரூக்: 23 வயதிலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு அறிமுகமாகியுள்ள இவர் இதுவரை 7 போட்டிகளில் 219 ரன்களை 164.66 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். குறிப்பாக செப்டம்பர் 23ஆம் தேதியன்று கராச்சியில் பாகிஸ்தானை பந்தாடிய இவர் வெறும் 35 பந்துகளில் 81* ரன்கள் விளாசி முதல் அரை சதமடித்து வெற்றி பெற வைத்து முதல் ஆட்டநாயகன் விருதை வென்று மிரட்டினார்.

1. அரஷ்தீப் சிங் – இந்தியா: சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் அசத்தி இந்தியாவுக்காக அறிமுகமாகி இதுவரை 11 போட்டியில் 14 விக்கெட்டுகளை 7.39 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து வரும் இவர் இந்தியாவின் லேட்டஸ்ட் இடதுகை நம்பிக்கை நட்சத்திர பவுலராக உருவெடுத்துள்ளார். அதிலும் 10 வருடங்கள் விளையாடிய புவனேஸ்வரை விட சிறப்பாக செயல்படுகிறார் என ரசிகர்கள் வெளிப்படையாக பாராட்டும் அளவுக்கு 23 வயதிலேயே அசத்தும் இவர் இந்த உலக கோப்பையில் இளம் இந்திய வீரராக களமிறங்க காத்திருக்கிறார்.

Advertisement