- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2022 டி20 உலகக்கோப்பையில் கோப்பையை வெல்ல தகுதியான இந்தியாவின் ஐவர் பந்துவீச்சு கூட்டணி இதோ

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. ஏனெனில் கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா கடந்த 2007க்குப்பின் 2-வது முறையாக இந்த உலகக் கோப்பையை தொட முடியாமல் திணறி வரும் கதைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதற்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அனைவரும் திறமையும் தரமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைமையில் அவர்களை தேர்வு செய்வதற்கான வேலைகளை ஐபிஎல் 2022 தொடரிலிருந்து அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் அசத்திய தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப் சிங் என அனுபவம் மற்றும் இளம் வீரர்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

பந்துவீச்சு கூட்டணி:
அந்த நிலையில் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையிலிருந்து உலகக்கோப்பைக்கான இறுதிகட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பேட்டிங் துறையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில் பந்துவீச்சு துறையில் விளையாட தகுந்த 5 வீரர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

5. ஹர்டிக் பாண்டியா: கடந்த வருடம் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது காயத்தால் பந்துவீச முடியாமல் தவித்த இவரை அணி நிர்வாகம் நம்பி தேர்வு செய்தது. அதில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட இவர் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத்துக்கு மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அசத்தலாகவும் செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதன்பின் தென்னாப்ரிக்க தொடரில் அசத்திய அவர் அயர்லாந்து தொடரில் கேப்டனாகவும் 2 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை பெற்றுக் கொடுத்து அதைத் தொடர்ந்து நடந்த இங்கிலாந்து தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்தினார். டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளையும் 500+ ரன்கள் எடுத்த முதல் இந்திய ஆல்-ரவுண்டராக சமீபத்தில் சாதனை படைத்த இவர் தற்போது அனைத்து போட்டிகளிலும் தேவையான நேரங்களில் பந்து வீசுவதுடன் பேட்டிங்கிலும் அசத்துகிறார். எனவே டி20 உலக கோப்பையில் இந்திய பந்துவீச்சு கூட்டணியில் 4-வது வேகப்பந்து வீச்சாளராகவும் முதல் ஆல்-ரவுண்டராகவும் விளையாட இவர் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

4. யுஸ்வேந்திர சஹால்: கடந்த 2020இல் பார்மை இழந்து சுமாராக பந்து வீசியதால் கடந்த டி20 உலக கோப்பையில் வாய்ப்பை இழந்த இவர் அதன்பின் கடுமையாக உழைத்து 2022 ஜனவரியிலிருந்து நல்ல பார்முக்கு திரும்பியுள்ளார். அதிலும் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அசத்திய இவர் ஹாட்ரிக் உட்பட ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

அதன்பின் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உட்பட அனைத்து டி20 தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் முதல் சுழல் பந்து வீச்சாளராக செயல்பட தகுதியானவர். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் சுழல் பந்துவீச்சு பெரிதாக எடுபடாது என்பதால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் என்பதே வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த பந்து வீச்சு கூட்டணியாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

3. அர்ஷ்தீப் சிங்: ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூர் அணிக்காக அசத்தி ஊதா கோப்பையை வென்றதன் வாயிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்று அசத்திய ஹர்ஷல் பட்டேல் துல்லியமாக பந்து வீசுபவராக இருந்தாலும் சமீபத்திய போட்டிகளில் சற்று ரன்களை வழங்கினார். அந்த நிலையில் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்துள்ள அவர் காயத்தால் விலகியுள்ளார் என்றும் அதனால் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

எனவே அவருக்கு பதிலாக பிரசிட் கிருஷ்ணா, அவேஷ் கான் போன்ற ரன்களை வாரி வழங்கும் பவுலர்களை விட சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அட்டகாசமாக பந்து வீசி கடைசி கட்ட ஓவர்களிலும் துல்லியமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் விளையாட தகுதியானவர். ஏனெனில் அதன்பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து தொடர்களில் வாய்ப்புக்காக பெஞ்சில் அமர்ந்திருந்த இவர் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்று இதுவரை 4 போட்டிகளில் விளையாடினாலும் ஸ்விங், யார்கர், கட்டர், ஸ்லோ பந்துகள் என சூழ்நிலைக்கேற்ப எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு திணறடிக்கும் அத்தனை விவேகத்தையும் பயன்படுத்தி பந்து வீசுகிறார்.

இவரைவிட அதிக கவனம் பெற்ற உம்ரான் மாலிக் உடனடி வாய்ப்பு பெற்றாலும் விவேகத்தை காட்டத் தவறியதால் வந்த வாக்கிலேயே காணாமல் போனார். அதை வைத்து எந்தளவுக்கு இவர் விவேகமாக செயல்படுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். அதுபோக அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் ஆஸ்திரேலியா சூழ்நிலையில் எதிரணி பேட்ஸ்மேன்களை நிச்சயம் திணறடிப்பார்.

2. புவனேஷ்வர் குமார்: துல்லியம் தரம் போன்ற வார்த்தைகளுக்கு சான்றாக திகழும் இவர் சமீப காலங்களில் தடுமாறினாலும் ஐபிஎல் 2022 தொடரில் அசத்தலாக செயல்பட்டு அதே பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

போட்டியின் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்துவீசும் திறமையை பெற்றுள்ள இவர் பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து விக்கெட்களை எடுத்து பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைக்கிறார். எனவே இவரின் திறமைக்கும் அனுபவத்திற்கும் இந்திய அணியில் 2-வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் தகுதி இவரிடம் உள்ளது.

1. ஜஸ்பிரித் பும்ரா: சந்தேகமின்றி இவர் தான் இந்திய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளர். ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பிய மும்பை அணியில் இவர் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்காக போராடினார். அதுபோக சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அசத்தி நல்ல பார்மில் இருக்கும் இவர் இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியை தலைமை ஏற்று பந்துவீசும் தகுதியும் பெற்றுள்ளார்.

- Advertisement -