- Advertisement -
ஐ.பி.எல்

6 நிமிடம் 10 பந்துகள் 100 ரன்ஸ்.. கிறிஸ் கெயிலின் 11 வருட சரித்திரத்தை தூளாக்கிய ஜேக்ஸ்.. 2 மாஸ் சாதனை

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அஹமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 201 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 84, ஷாருக்கான் 58 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதை சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி 70*, கேப்டன் டு பிளேஸிஸ் 24, வில் ஜேக்ஸ் 100* ரன்கள் விளாசினர். அதனால் 16 ஓவரிலேயே 206/1 ரன்கள் எடுத்த பெங்களூரு அதிரடியான வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

மாபெரும் சாதனை:
இந்த வெற்றிக்கு தனது முதல் ஐபிஎல் சதமடித்து 100* (41) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய வில் ஜேக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி தம்முடைய ஸ்டைலில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் கேப்டன் டு பிளேஸிஸ் அவுட்டானதும் களமிறங்கிய வில் ஜேக் அவரை விட அதிரடியாக விளையாடி மாலை 6.41 மணிக்கு 31 பந்துகளில் அரை சதத்தை அடித்தார்.

அப்போது மோகித் சர்மாவுக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் 28 ரன்களை தெறிக்க விட்டார். அதே வேகத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரஷித் கானுக்கு எதிராக 6, 6, 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட வில் ஜேக்ஸ் மாலை 6.47 மணிக்கு 41 பந்துகளில் சதமடித்தார். அதாவது 6.41 மணிக்கு 50 ரன்கள் தொட்ட அவர் அடுத்த 6 நிமிடங்களில் அடுத்த 10 பந்துகளில் மேலும் 50 ரன்கள் அடித்து சதமடித்தார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வேகமாக 50 ரன்களில் இருந்து 100 ரன்களை தொட்ட வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த வில் ஜேக் மாபெரும் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு புனேவுக்கு எதிராக பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெயில் 13 பந்துகளில் 50 ரன்களிலிருந்து 100 ரன்களை தொட்டதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: தல 150.. ஹைதராபாத்துக்கு 11 வருட படுதோல்வியை பரிசளித்த சிஎஸ்கே.. தோனி மாபெரும் வரலாற்று சாதனை

அது போக ஐபிஎல் தொடரில் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கானுக்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனை உடைத்த வில் ஜாக் மற்றொரு வரலாறு படைத்தார். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரசித் கானுக்கு எதிராக கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அவருடைய இந்த அடியை எதிர்ப்புறம் இருந்து விராட் கோலி வாயில் கை வைத்து வியந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -