9வது முறை.. பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் அடி.. அக்தர் முகத்தில் கரியை பூசிய இந்தியா.. ஆசிய சாம்பியனாகி சாதனை

IND vs PAK Final 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அதிரடியாக விளையாட முயற்சித்து 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஃபர்கான் 57, பகார் ஜமான் 46 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 113/1 என பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தானை சுருட்டிய இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் அபிஷேக் சர்மா 5 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா அபாரம்:

அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் திணறலாக விளையாடி 1 (5) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில் 12 (10) ரன்னில் அவுட்டானார். அதனால் 20/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு திலக் வர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

அவருடன் சேர்ந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (21) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். எதிர்ப்புறம் திலக் வர்மா நேர்த்தியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அந்த ஜோடியில் சிவம் துபே 33 (22) ரன்னில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

9வது முறையாக சாம்பியன்:

இருப்பினும் மறுபுறம் 3 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட திலக் வர்மா 69* (53) ரன்கள் விளாசினார். இறுதியில் ரிங்கு சிங் பவுண்டரியுடன் ஃபினிஷிங் செய்ததால் 19.4 ஓவரில் 150/5 ரன்களை அடித்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இத்தொடரில் ஹாட்ரிக் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா ஆசியக் கோப்பையை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்தது.

இதையும் படிங்க: 17 விக்கெட்ஸ்.. அஜந்தா மெண்டிஸ் ஆல் டைம் சாதனை சமன்.. மலிங்காவை முந்திய குல்தீப் வரலாற்று சாதனை

மேலும் 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. வேறு எந்த அணியும் 7 முறை வென்றதில்லை. மறுபுறம் அபிஷேக் ஷர்மாவை அவுட்டாக்கினால் இந்தியா தோற்கும் என்று சோயப் அக்தர் உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இப்போட்டியில் அபிஷேக் தாக்கத்தை ஏற்படுத்தாமலேயே பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா சோயப் அக்தர் போன்றவர்களின் முகத்தில் கரியைப் பூசியது என்றால் மிகையாகாது.//

Advertisement