வருங்காலத்தில் நம்மகிட்ட அத்தனை டீம் இருக்கும், இந்திய அணியின் எதிர்காலம் பற்றி – கபில் தேவ் கருத்து

Kapil Dev Rohit Sharma Virat Kohli
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்று வரும் இந்தியா சொந்த மண்ணில் தன்னை வலுவான அணி என்பதை நிரூபித்து வருகிறது.

IND-vs-NZ

மேலும் ராகுல், பும்ரா போன்ற முதன்மை வீரர்களுக்கு பதிலாக துடிதுடிப்புடன் எதிரணிகளை மிரட்டக்கூடிய சுப்மன் கில், முகமது சிராஜ் போன்ற தரமான இளம் வீரர்களும் இந்திய அணிக்கு கிடைத்து வருகிறார்கள். முன்னதாக கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்கள் கேப்டனாக பயன்படுத்தப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதில் பல்வேறு கேப்டன்கள் தலைமையில் நிறைய வீரர்கள் வாய்ப்பு பெற்று சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை என்பது வேறு கதை.

- Advertisement -

இந்தியாவின் வருங்காலம்:
ஆனால் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே சொந்த மண்ணாக இருந்தாலும் வெளிநாட்டு வீரர்களாக இருந்தாலும் இருதரப்பு தொடர்களில் இந்தியாவின் வெற்றியை எதிரணிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது என்ன பெருமை என்று கேட்க வேண்டாம். ஏனெனில் அண்டை நாடான பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் சொந்த மண்ணில் கூட வெல்ல முடியாமல் எதிரணிகளிடம் திண்டாடி வருகின்றன.

அப்படி முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெறும் அளவுக்கு தேவையான வீரர்கள் கிடைத்தும் சூரியகுமார் யாதவ், இசான் கிசான், குல்தீப் யாதவ் போன்ற கடந்த போட்டிகளில் சதம், இரட்டை சதம், ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பெஞ்சில் அமர வைக்கப்படும் நிலைமையும் இந்தியாவில் ஏற்படுகிறது. அப்படி அதிகப்படியான திறமைகள் குவிந்திருப்பதால் வருங்காலத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வெவ்வேறு வகையான கிரிக்கெட்டில் 3 வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் வெவ்வேறு அணிகள் விளையாடுவதை பார்க்க முடியும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் இந்திய அணியில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வது புதிய வீரர்கள் அணிக்குள் வந்து தேசத்துக்காக விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. எனவே வருங்காலத்தில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெவ்வேறு வடிவங்களுக்கு ஒரு அணி என்ற வீதம் 3 இந்திய அணி விளையாடுவதை என்னால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்”

Kapil-Dev

“சொல்லப்போனால் அந்த அணுகு முறையில் செயல்பட்டால் மட்டுமே நம்மிடம் இருக்கும் அதிகப்படியான வீரர்களை சரியாக பயன்படுத்தும் நிலைமையும் உருவாகும். இருப்பினும் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட அணி விளையாடுவது வழக்கமாகும். அதில் தேவைக்கேற்ப ஒரு சிலரை சேர்த்துக் கொள்வது அவசியம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்காக கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒருவரை மற்றொருவருக்காக அதிரடியாக நீக்கும் போது அது ஏன் நடைபெறுகிறது என்பதை எங்களைப் போன்ற முன்னாள் வீரர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை”

இதையும் படிங்க: இப்படியா ஏமாறுவீங்க? நண்பரிடம் பல லட்சத்தை ஏமாந்த உமேஷ் யாதவ் – என்ன நடந்தது? விவரம் இதோ

“இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை வெல்லும் அளவுக்கு நம்மிடம் தரமான அணி உள்ளது. அதே சமயம் நம்மையும் தோற்கடிக்கும் அளவுக்கு உலகில் இதர அணிகளும் உள்ளன. எனவே உலக கோப்பையை நாம் வெல்வதற்கு அதிர்ஷ்டம் தேவைப்படுவதுடன் கலவையான தரமான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் அவர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அது தான் மிகவும் முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement