ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 15ஆம் தேதி நமீபியா மற்றும் ஜிம்பாப்வேவில் துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் அருகில் உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அத்தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.
கடைசிப் போட்டி ஜனவரி 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு பெனோனி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அண்டர்-19 அணி அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 393/7 ரன்கள் குவித்தது.
இந்தியா மிரட்டல் பேட்டிங்:
இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்யவன்சி அதிரடியாக விளையாடி 10 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதமடித்து 127 (74) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து 227 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்த ஆரோன் ஜார்ஜ் தமது பங்கிற்கு சதமடித்து 118 (106) ரன்கள் குவித்தார். அவர்களுடன் வேதாந்தா திரிவேதி முகமது இனான் 28*, அபிஞான் குண்டு 21, ஹெனில் பட்டேல் 19* ரன்கள் குவித்தார்கள்.
தென்னாப்பிரிக்கா அண்டர்-19 அணிக்கு அதிகபட்சமாக தாண்டோ சோனி 3, ஜேசன் ரௌல்ஸ் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்ப முதலே இந்தியாவின் பவுலர்களின் நல்ல பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடியது. அதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 35 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
ஹாட்ரிக் வெற்றியுடன் தயார்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேனியல் போஸ்மேன் 40, பால் ஜேம்ஸ் 41, கோர்னே போத்தா 36* ரன்களை எடுத்தும் மற்ற வீரர்கள் அசத்தவில்லை. அதனால் 233 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அண்டர்-19 அணி அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக 3 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஸ் செய்த இளம் இந்திய அணி கோப்பையை வென்றது.
இதையும் படிங்க: எல்லாம் ஓகே.. ஷ்ரேயாஸ் ஐயர் முழுசா ரெடி ஆகிட்டாரு.. பி.சி.சி.ஐ கொடுத்த கிரீன் சிக்னல் – விவரம் இதோ
தென்னாப்பிரிக்க மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்கு இப்போட்டியில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக கிசான் குமார் 3, முகமது இனான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இந்த வெற்றியால் 2026 அண்டர்-19 உலகக் கோப்பையிலும் நன்றாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை இளம் இந்திய அணி காண்பித்துள்ளது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுக்கு முதல் போட்டியில் அமெரிக்காவை ஜனவரி 15ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



