உடைந்த இந்தூர் கோட்டை.. கம்பீர் வந்ததுமே காற்றில் பறந்த இந்தியாவின் 3 வெற்றிச் சரித்திரங்கள்

Gautam Gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 2 – 1 (3) என்ற கணத்தில் தோற்றுள்ளது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 1988, 1995, 1999, 2010, 2016, 2017, 2013 ஆகிய வருடங்களில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் விளையாடியது.

அப்போதெல்லாம் முறையே 4 – 0, 3 – 2, 3 – 2, 5 – 0, 3 – 2, 2 – 1, 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்தது. ஆனால் அந்த வெற்றி நடை தற்போது புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் தோல்வியால் உடைந்துள்ளது. குறிப்பாக நேற்று இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியது.

- Advertisement -

கம்பீர் வந்ததும்:

அந்த மைதானத்தில் இதற்கு முன் விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா 7 வெற்றிகளைப் பெற்றிருந்தது. குறிப்பாக 2023இல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்திருந்தது. அதனால் அந்த மைதானம் இந்திய அணியின் கோட்டையாக திகழ்ந்தது என்றே சொல்லலாம்.

ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கோட்டையை உடைத்த நியூஸிலாந்து வரலாற்று தோல்வியைப் பரிசளித்துள்ளது. இது மட்டுமின்றி 2024ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் மோசமாக விளையாடிய இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

காற்றில் பறந்த 3 சரித்திரங்கள்:

அதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் 2012 முதல் 2023 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இந்தியா உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டது. ஆனால் அப்போது பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்றதால் இந்தியாவின் வெற்றி நடை உடைந்தது.

இதையும் படிங்க: 8க்கு 8 வெற்றி.. இப்போ 6இல் 4 தோல்வி.. ரோஹித் தலைமையில் மிரட்டிய இந்தியாவை முடக்கிய அகர்கர், கம்பீர்

அதே போல தற்போது நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் முதல் முறையாக தோற்ற இந்தியா இந்தூர் மைதானத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதிலிருந்து கௌதம் கம்பீர் வந்ததும் காலம் காலமாக கட்டிக் காத்து வந்த இந்தியாவின் 3 வெற்றிச் சரித்திரம் காற்றில் பறந்துள்ளது என்றே சொல்லலாம். அதற்கு சோதனை என்ற பெயரில் அடிக்கடி கெளதம் கம்பீர் செய்த மாற்றங்கள், தவறான அணி தேர்வுகள், தகுதியற்ற பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு, புதிய ஒருநாள் கேப்டனாக கில்லை தேர்ந்தெடுத்தது ஆகியவை முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement