ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று வெறும் கையுடன் நாடு திரும்பியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்வியை கொடுத்தது. அதை விட தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருந்தும் பேட்டிங், பவுலிங் அனைத்து துறைகளிலும் இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.
குறிப்பாக ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்ததால் அவர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களை சேர்க்குமாறு ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் அந்த தோல்விக்கு பின் நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளில் விளையாட உள்ளது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.
அணி அறிவிப்பு:
இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி துவங்கும் அந்த தொடருக்கான இந்திய அணியை எஸ்எஸ் தலைமையிலான தற்காலிக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் வரை வேறு எந்த டெஸ்ட் தொடர்களும் இல்லாததால் தற்போதைக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று வெளியான செய்திகள் உண்மையாகியுள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சுப்மன் கில், விராட் கோலி, போராடி கம்பேக் கொடுத்து ஃபைனலில் அசத்திய அஜிங்கிய ரகானே துணை கேப்டனாகவும் தேர்வாகியுள்ளனர்.
ஆனால் ஃபைனலில் சுமாரான ஷாட் அடித்து அனுபவத்தை கொஞ்சம் கூட காட்டாமல் சொதப்பிய புஜாராவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு 2023 ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அதிரடி வீரர் யசஸ்வி ஜெயிஸ்வால் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். அதே சமயம் விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட் இல்லாத நிலைமையில் கேஎஸ் பரத் மற்றும் இசான் கிசான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஸ்பின்னர்களாக ஃபைனலில் கழற்றி விடப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சுத் துறையில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் 12 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், முகமது சிராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஷார்துல் தாகூர் மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில் நட்சத்திர சீனியர் வீரர் முகமது ஷமி ஃபைனலில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் சர்ப்ராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதே போல ஃபைனலில் தேர்வான சூரியகுமார் யாதவ் மறுவாய்ப்பு பெறாமலேயே கழற்றி விடப்பட்டுள்ளது புரியாத புதிராக அமைந்துள்ளது.
இதையும் படிங்க:தோனிக்கு அடுத்து நடராஜன் தான் இதை செய்ஞ்சிருக்காரு. புதிய மைதானத்தை திறந்து வைத்து – தினேஷ் காத்திக் பேசியது என்ன?
2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரகானே, கேஎஸ் பரத், இசான் கிசான், ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துள் தாகூர், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி