இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா தலைமையில் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா இப்போட்டியிலும் தோற்றது. அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் பதவி விலக வேண்டுமென்று பெரும்பாலான ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் அவரே கேப்டனாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணி அறிவிப்பு:
ஜூலை 12ஆம் தேதி துவங்கும் அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவரது தலைமையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் இறுதி அடியை இந்த தொடரிலிருந்து துவக்கும் இந்திய அணிக்கு காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை அடித்து உலக சாதனை படைத்து தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் ருதுராஜ் கைக்வாட் தேர்வாகியுள்ளார்.
அதே போல டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர்களாக ரசிகர்களின் அபிமான சஞ்சு சாம்சன் மற்றும் இசான் கிசான் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஷார்துல் தாக்கூருடன் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அத்துடன் சுழல் பந்து வீச்சு துறையில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் மீண்டும் ஜோடியாக தேர்வாகியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக் மற்றும் இளம் வீரர் முகேஷ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அது போக நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் முகமது சிராஜுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் நீண்ட நாட்கள் கழித்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தேர்வாகி கம்பேக் கொடுத்துள்ளார்.
ஆனாலும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்ட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்றவர்களுக்கு உடனடியாக தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே போல டெஸ்ட் அணியில் கழற்றி விடப்பட்ட சீனியர் வீரர் முகமது சமியுடன் புவனேஸ்வர் குமாரும் தேர்ந்தெடுக்கப்படாதது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அவை அனைத்தையும் விட இந்த அணியில் தமிழகத்திலிருந்து யாருமே தேர்ந்தெடுக்கப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெஸ்ட் அணியின் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஒருநாள் அணியில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் தமிழக வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி இதோ:
இதையும் படிங்க:IND vs WI : புது முகங்களுக்காக கழற்றி விடப்பட்ட சீனியர், வெ.இ டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி இதோ
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஸான் கிசான், சர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வென்ற சஹால், ஜெயதேவ் உனட்கட், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.