இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பை கைப்பற்றியது. அந்த நிலையில் நேற்று நடைபெற்ற 4வது போட்டியிலும் இலங்கையை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 4 – 0* என்ற கணக்கில் தொடரில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 221/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 162 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்த ஸ்மிருத்தி மந்தானா அரை சதமடித்து 80 (48) ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஷபாலி வர்மா அரை சதமடித்து 79 (46) ரன்கள் குவித்து அசத்தினார்.
தனித்துவமான சாதனை:
3வது இடத்தில் களமிறங்கிய ரிச்சா கோஸ் அவர்களை விட அதிரடியாக விளையாடி 40* (16) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கேப்டன் ஹர்மன்பிரீத் 16* (10) ரன்களை அடித்து கை கொடுத்ததால் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. அதை விட இப்போட்டியில் எந்த வீராங்கனையும் சதம் அடிக்காமலேயே இந்தியா 221/1 ரன்கள் குவித்தது.
அதன் வாயிலாக ஒரு சர்வதேச மகளிர் டி20 போட்டியில் சதமடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2024இல் நவிமும்பையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் இந்தியா சதம் அடிக்காமலேயே 217/4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இந்தியா அசத்தல்:
அன்றைய போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 77, ரிச்சா கோஸ் 54, ஜெமிமா ரோட்ரிகஸ் 39, ராகவி பிஸ்த் 31* ரன்கள் அடித்து 20 ஓவரில் இந்தியா 217/4 ரன்கள் குவிக்க உதவினார்கள். அதை மிஞ்சும் வகையில் இந்தப் போட்டியில் சதமடிக்காமல் இந்தியா அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் கடுமையாக போராடியும் 191/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு சமமா பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்.. எங்களுக்கும் அந்த ஆசையில்ல.. தலைவர் நக்வி பேட்டி
அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 33, கேப்டன் சமாரி அட்டப்பட்டு 52 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி, வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி டிசம்பர் 30ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



