
ஐசிசி 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளையும் இந்தியா உடைத்தது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலில் அந்தத் தொடர் வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் அந்நாட்டில் தற்போது அரசியல் ரீதியான அவசரநிலை காணப்படுகிறது. எனவே அந்த உலகக் கோப்பை வங்கதேசத்துக்கு பதிலாக ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடர் வரும் அக்டோபர் 3 முதல் 20 வரை துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய 2 நகரங்களில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அந்த 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
அந்தப் பிரிவில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை வீதம் மொத்தம் 4 லீக் போட்டிகளில் மோதும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவுகளிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். அதன் பின் செமி ஃபைனலில் வெல்லும் 2 அணிகள் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெறும் என்ற வகையில் இத்தொடரின் ஃபார்மட் அமைக்கப்பட்டுள்ளது.
செமி ஃபைனல், ஃபைனல் ஆகிய போட்டிகளுக்கு ரிசர்வ் டே விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் அக்டோபர் 17ஆம் தேதி துபாயில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் தான் விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் வரும் செப்டம்பர் 29 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது.
இதையும் படிங்க: 145 டூ 130.. பும்ராவை பாருங்க.. விழுந்தாலும் உங்களை மாதிரி குறைஞ்சு போகல.. பாக் அணியை விளாசிய ரசித் லதீப்
இந்திய அணியின் அதிகாரப்பூர்வ அட்டவணை (இந்திய நேரம்):
1. அக்டோபர் 4, இரவு 7.30: இந்தியா – நியூஸிலாந்து, துபாய்
2. அக்டோபர் 6, மதியம் 3.30: இந்தியா – பாகிஸ்தான், துபாய்
3. அக்டோபர் 9, இரவு 7.30: இந்தியா – இலங்கை, துபாய்
4. அக்டோபர் 13, இரவு 7.30: இந்தியா – ஆஸ்திரேலியா, ஷார்ஜா