இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் காயத்தை சந்தித்தார். அதனால் கடந்த தென்னாபிரிக்க தொடரில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த பின் அவர் எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.
நியூஸிலாந்து தொடர்:
எனவே ஃபிட்னஸ் அடிப்படையில் அவர் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மறுபுறம் ஸ்ரேயாஸ் அணிக்குள் வந்ததால் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட் கழற்றி விடப்பட்டுள்ளார். அதே சமயம் ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதே போல விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பேக்-அப் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார். ஆல் ரவுண்டர்கள் பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, நித்திஷ் ரெட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இருப்பினும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு:
அதனால் வேகப்பந்து வீச்சு துறையில் முகமது சிராஜ் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் தேர்வாகியுள்ளார். அவருடன் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். சுழல் பந்து வீச்சுத் துறையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்காத நிலையில் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல்: 9.20 கோடிக்கு ஆசையுடன் வாங்கிய முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்த கொல்கத்தா.. காரணம் என்ன?
2026 நியூஸிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (கீப்பர்), ரிஷப் பண்ட் (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்



