ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. 2016 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 60 போட்டியில் 65 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
குறிப்பாக பவர்பிளே மற்றும் கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் துல்லியமாக பவுலிங் செய்து குறைவான ரன்கள் கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் திறமையுடையவர். அதனால் ஐபிஎல் ஏலத்தில் தங்களுடைய அணிக்காக விளையாட ரஹ்மானை 9.20 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு கொல்கத்தா ஆசையுடன் வாங்கியது. அந்த தேர்வு கொல்கத்தா ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
ஆசையுடன் வாங்கிய கொல்கத்தா:
இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பதற்றமான சூழ்நிலையை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மேல் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் வலம் வருகின்றன. அந்த தாக்குதலில் சில மக்கள் இயற்கை எய்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அத்துடன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக வங்கதேசத்தை சேர்ந்த ரஹ்மான் விளையாடக்கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதனால் ஐபிஎல் தொடரில் ரஹ்மான் கொல்கத்தா அணிக்காக விளையாடும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுரை வழங்கியது.
விடுவித்த கொல்கத்தா:
அவருக்கு பதிலாக தேவையான மாற்று வீரரை தேர்ந்தெடுத்துக்கொள்ள கொல்கத்தா அணிக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியில் இருந்து முஸ்தபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்படுவதாக கொல்கத்தா நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கான மாற்று வீரர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கொல்கத்தா தெரிவித்துள்ளது.
இது பற்றி கொல்கத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில். “ஐபிஎல் ஒழுங்குமுறை அமைப்பான பிசிசிஐ வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக முஸ்தபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தியதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உறுதிப்படுத்துகிறது. இந்திய வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில், உரிய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பின் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: 6, 6, 6, 6, 6, 4.. ஒரே ஓவரில் 34 ரன்ஸ்.. 71/5 டூ 293.. தனியாளாக மாஸ் காட்டிய பாண்டியா.. விதர்பாவை விளாசி மிரட்டல் சதம்
“ஐபிஎல் விதிமுறைகளின் படி கொல்கத்தா அணிக்கு தேவையான மாற்று வீரரை பிசிசிஐ வாங்க அனுமதிக்கும். அது பற்றிய விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்று கூறினார். இந்த முடிவுக்கு வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விளையாட்டில் அரசியலை கலக்கும் இந்தியாவின் இம்முடிவு விளையாட்டுக்கு நல்லதல்ல என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



