இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது.
அதில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சீனியர் வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது. அதனால் இலங்கையை அசால்டாக அடித்து நொறுக்கி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முதல் போட்டியிலேயே வெறும் 230 ரன்களை அடிக்க முடியாத இந்தியா போராடி சமன் செய்தது.
ரிட்டையாராக சொல்லுங்க:
ஆனால் 2வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா வெறும் 240 ரன்களை அடிக்க முடியாமல் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் இலங்கையை விட இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர். ஆனாலும் 250க்கும் குறைவான இலக்கை அடிக்க முடியாமல் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
சொல்லப்போனால் அதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை போல ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹ்மத் கூறியுள்ளார். அந்த இருவரும் ஓய்வு பெற்று விட்டால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா டாப் அணியாக வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வென்றது. இப்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வையுங்கள். அதன் பின் இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு டாப் அணியாக உருவெடுக்கும் என்பதை நான் பார்ப்பேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அவுட்ன்னு கோலிக்கே தெரியும்.. இலங்கையில் இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாட இதான் காரணம்.. ஆகாஷ் சோப்ரா
அதைப் பார்த்து கோபமடையும் இந்திய ரசிகர்கள் முதலில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை பாகிஸ்தான் அணியிலிருந்து வீட்டுக்கு அனுப்புங்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் விராட், ரோஹித்தை ஓய்வு பெற வைத்து இந்தியாவை பலவீனமடைய வைக்க யோசனை தெரிவிக்காமல் பாகிஸ்தான் அணியை எப்படி முன்னேற்றலாம் என்பதை சிந்தியுங்கள் என்றும் அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.



