இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய அனுபவத்தை கொண்ட கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அது போக 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் நீண்ட காலம் விளையாடிய அனுபவத்தை கொண்ட அவர் கேப்டனாகவும் ஆலோசகராகவும் ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அப்படி மிகப்பெரிய அனுபவத்தை கொண்டிருப்பதால் கம்பீரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் கௌதம் கம்பீர் சிலரது பரிந்துரையால் குறுக்கு வழியில் இந்தியாவின் பயிற்சியாளராக வந்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹ்மத் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
குறுக்கு வழியில்:
குறிப்பாக என்சிஏ இயக்குனராக உள்ள விவிஎஸ் லஷ்மன் தான் நியாயப்படி இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போன்றவர்களின் ஆதரவுடன் கௌதம் கம்பீர் திடீரென குறுக்கே பயிற்சியாளராக வந்துள்ளதாக தன்வீர் அஹ்மத் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் தான் நீண்ட காலமாக இந்தியா பி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் கௌதம் கம்பீரின் நியமனம் ரசீதைப் பெற்றுக் கொண்டு உள்ளே வந்தது போல் இருக்கிறது” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல ஜாம்பவான் ராகுல் டிராவிட் 2016 முதல் பெங்களூருவில் உள்ள என்சிஏ இயக்குனராக செயல்பட்டார்.
அத்துடன் அண்டர்-19, இந்தியா ஏ அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட்ட பின்பே அவர் 2021இல் சீனியர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மறுபுறம் 2021 முதல் அந்த இடத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் வேலை செய்து வருகிறார். எனவே டிராவிட்டுக்குப் பின் லக்ஷ்மன் தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வென்றது.
இதையும் படிங்க: கம்பீர் சொன்னாலும்.. அந்த தமிழக வீரருக்காக நீங்களா வழி விடனும்.. விராட், ரோஹித்துக்கு நெஹ்ரா அட்வைஸ்
அந்த வெற்றியை பார்த்ததுமே பிசிசிஐ உடனடியாக அவரது பக்கம் திரும்பியது. சொல்லப்போனால் சென்னையில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய ஃபைனல் முடிந்த பின் கௌதம் கம்பீருடன் செயலாளர் ஜெய் ஷா பேச்சு வார்த்தை நடத்தினார். ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த சில நாட்களில் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.



