கம்பீர் சொன்னாலும்.. அந்த தமிழக வீரருக்காக நீங்களா வழி விடனும்.. விராட், ரோஹித்துக்கு நெஹ்ரா அட்வைஸ்

Ashish Nehra
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். டி20 கிரிக்கெட்டில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அசத்திய அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினர். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 2டு பேட்ஸ்மேன்களாகவும் அவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அந்தளவுக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக செயல்பட்ட அவர்கள் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

வழி விடுங்க:
அவரிடம் விராட் மற்றும் ரோஹித் ஆகியோரின் வருங்காலம் பற்றி சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்கள் என்று கௌதம் கம்பீர் உறுதியளித்தார். இந்நிலையில் ரசிகர்களைப் போல விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாடுவதை தாமும் விரும்புவதாக ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

அதற்கு கம்பீரும் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக வீரர் சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வழி விடுவதற்காக தக்க சமயத்தில் விராட் மற்றும் ரோஹித் விடை பெற வேண்டும் என்றும் நெஹ்ரா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது. “2027 உலகக் கோப்பை நீண்ட தூரத்தில் இருக்கிறது”

- Advertisement -

“அதில் விளையாடுவதற்கு அவர்கள் எந்தளவுக்கு உத்வேகமாக இருக்கிறார்கள் என்பது முக்கியம். ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு உத்வேகம் ஒரு பிரச்சனையில்லை என்பதை நாம் அறிவோம். அதைப் பின்பற்றியே அவர்கள் தங்களுடைய கேரியரை கையாண்டு வருகின்றனர். ஆனால் இங்கிருந்து நீங்கள் அதிக வயதை தொடுவீர்கள். மறுபுறம் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் தொடர்ந்து ரன்கள் அடித்து உங்களை தள்ளுவார்கள்”

இதையும் படிங்க: முதல்நாள் பயிற்சியிலேயே சஞ்சு சாம்சன் மீது தனி கவனம் செலுத்திய கம்பீர் – எதற்காக தெரியுமா?

“அதே சமயம் விராட் கோலி ஓய்வு பெறுவதை நான் விரும்ப மாட்டேன். கம்பீரிடம் நீங்கள் கேட்டாலும் ஃபிட்டாக இருந்தால் கண்டிப்பாக சாய் சுதர்சனுக்கு பதிலாக விளையாடுங்கள் என்று சொல்வார். ஆனால் உலக வழியில் நீங்கள் வயதாகும் போது சிறந்து விளங்கும் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும். 4 வருடத்துக்கு (2027) இன்னும் நீண்ட தூரம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement