இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ரவிச்சந்திரன் அஷ்வின் மகத்தான வீரர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளிக்கப்படுவதில்லை என வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இஃபால் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் போல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் குறித்தும் அதிகம் பேசும் நாம் அஸ்வினின் இந்த சிறப்பான செயல்பாட்டை பற்றி பெரிதாக பேசுவதில்லை.
எப்போதெல்லாம் அவர் சதம் அடிக்கிறாரோ அல்லது ஐந்தாறு விக்கெட்டுகளை வீழ்த்துகிறாரோ அப்போது மட்டும் தான் அவரைப் பற்றி பேசுகிறோம். ஆனால் என்னை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு சமமான வீரராக அஸ்வின் எப்போதுமே இருந்து வருகிறார்.
இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக அவர் அளித்த பங்களிப்பு என்பது என்னை பொறுத்தவரை மிகவும் அதிகம். ரோகித் சர்மா, விராட் கோலி அளவிற்கு அவர் இந்திய அணிக்காக நிறையவே சாதித்து இருக்கிறார் என தமீம் இஃபால் கூறினார். அவர் கூறியது போன்று வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வேளையில் முதல் இன்னிங்சில் அசத்தலான சதத்தை பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க : எங்கள் ஹீரோ சச்சினை முந்துவாரா தெரியாது.. ஆனா ஜோ ரூட் ஏற்கனவே இதை செஞ்சுட்டாரு.. இயன் பெல்
அதோடு இரண்டாவது இன்னிங்சிலும் ஆறு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார். அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றும் அசத்தியிருந்தார். ஒருவேளை முதல் இன்னிங்சில் அஷ்வின் சதம் அடிக்கவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.



