- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பை: 259க்கு ஆல் அவுட்.. சட்டீஸ்கரிடம் ஃபாலோ ஆன்.. அடி பணியாமல் புள்ளிகளை அள்ளிய தமிழ்நாடு

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் பாகம் நடைபெற்று வருகிறது. அதில் சௌராஷ்டிராவுக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் வென்ற தமிழ்நாடு அணியின் இரண்டாவது போட்டி டெல்லிக்கு எதிராக டிராவில் முடிந்தது. அந்த நிலையில் தமிழ்நாடு தங்களுடைய 3வது போட்டியில் சட்டீஸ்கர் அணியை எதிர்கொண்டது.

அப்போட்டி அக்டோபர் 26ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற சட்டீஸ்கர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அபாரமாக பேட்டிங் செய்து 500 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஆயுஸ் பாண்டே சதமடித்து 124 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சட்டீஸ்கர் அசத்தல்:

அவருடன் ரிஷப் திவாரி 46, அனுஜ் திவாரி 84, சஞ்சித் தேசாய் 82, ஏக்நாத் கேர்கர் 52, அஜித் மண்டல் 64 என மற்ற பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்கள் குவித்து அசத்தினார்கள். தமிழ்நாடு அணி சார்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 4, சித்தார்த் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி சுமாராக பேட்டிங் செய்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் நாராயன் ஜெகதீசன் 49, ஷாருக்கான் 50, ஆண்ட்ரெ சித்தார்த் 55*, அஜித் ராம் 34, விஜய் சங்கர் 32 ரன்கள் எடுத்தனர். சத்தீஸ்கர் சார்பில் அதிகபட்சமாக சுபம் அகர்வால் 5, ஜிவேஷ் புட்டே 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 241 ரன்கள் முன்னிலை பெற்ற சத்தீஸ்கர் அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறும் முனைப்புடன் தமிழ்நாடு அணியை மீண்டும் பேட்டிங் செய்யுமாறு ஃபாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

தமிழ்நாடு பதிலடி:

ஆனால் அந்த வாய்ப்பில் தமிழ்நாடு அணி சொந்த மண்ணில் தோல்விக்கு அடி பணியாமல் விடாமல் பதிலடி கொடுத்தது. குறிப்பாக சுரேஷ் லோகேஸ்வர் 6, பூபதி குமார் 9 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ஜெகதீசன் 60 ரன்கள் குவித்து அசத்தினர். அதே போல மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய விஜய் சங்கர் சதமடித்து 104* ரன்களும் ஆண்ட்ரே சித்தார்த் 41 ரன்களும் குவித்து சவாலை கொடுத்தனர்.

இதையும் படிங்க: ரோஹித் நிச்சயமா இந்த விஷயத்துல சும்மா இருக்க மாட்டாரு.. கண்டிப்பா கம்பேக் இருக்கு – ரவி சாஸ்திரி கருத்து

இறுதியில் ரஞ்சன் பால் 39* ரன்கள் எடுத்ததால் தமிழ்நாடு 264-4 ரன்கள் எடுத்திருந்த போது நேரம் முடிந்ததால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. சட்டீஸ்கர் அணிக்கு அஜய் ஜாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றியை பெற முடியவில்லை. அந்த வகையில் இப்போட்டியில் ஃபாலோ ஆன் பெற்றும் தோல்விக்கு அடி பணியாத தமிழ்நாடு ட்ராவை பதிவு செய்ததற்காக 3 புள்ளிகளை பெற்றது. இதையும் சேர்த்து 3 போட்டிகளில் தமிழ்நாடு அணி எலைட் குரூப் டி புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் +1.122 ரன்ரேட்டை பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

- Advertisement -