183 ரன்ஸ்.. புஜாராவை மடக்கிய தமிழக வீரர்.. சாய் கிசோர் மேஜிக்.. கோவையில் அசத்தும் தமிழ்நாடு

TN vs SAU
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் சாய் கிஷோர் தலைமையில் விளையாடி வரும் தமிழ்நாடு அணி லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று 2016க்குப்பின் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் காலிறுதிப் போட்டியில் வலுவான சௌராஷ்ட்ராவை தங்களுடைய சொந்த மண்ணில் தமிழ்நாடு எதிர்கொண்டது.

பிப்ரவரி 23ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜீவ்ரஜனியை ஆரம்பத்திலேயே சந்திப் வாரியர் டக் அவுட்டாக்கினார். அந்த நிலையில் வந்த செல்டன் ஜேக்சன் மற்றொரு துவக்க வீரர் ஹ்ர்விக் தேசாயுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

அசத்தும் தமிழ்நாடு:
இருப்பினும் அந்த ஜோடியில் செல்டன் ஜாக்சனை 22 ரன்களில் கேப்டன் சாய் கிஷோர் அவுட்டாக்கினார். அந்த நிலையில் வந்த நட்சத்திர அனுபவ மூத்த வீரர் செடேஸ்வர் புஜாரா 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தன்னுடைய ஸ்டைலில் நங்கூரத்தை போட்டு சௌராஷ்டிராவை காப்பாற்ற முயற்சித்தார்.

ஆனால் அப்போது இளம் வீரர் அஜித் ராம் சுழல் பந்தை தவறாக கணித்த புஜாரா அவரிடமே அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த உத்வேகத்தில் அடுத்ததாக வந்த வசவடாவை 25 ரன்களில் காலி செய்த அஜித் ராம் மறுபுறம் அரை சதமடித்து தமிழகத்திற்கு பெரிய சவாலை கொடுத்த ஹரிவிக் தேசாயையும் 83 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அப்போது வந்த பிரேரட் மன்கட் நிதானமாக விளையாடி 35* ரன்கள் எடுத்து போராடினார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் வந்த தர்மேந்திர சிங் ஜடேஜா 0, சைரக் ஜானி 0, கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 1 ரன்களில் கேப்டன் சாய் கிஷோர் சுழலில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 77.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சௌராஷ்டிரா வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய தமிழகம் சார்பில் கேப்டன் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3, சந்திப் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: 11.39 மணிக்கு நாற வாய்.. 1.28 மணிக்கு வேற வாய்.. மைக்கேல் வாகன் கருத்தை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணிக்கு நாராயன் ஜெகதீசன் நிதானமாக பேட்டிங் செய்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் விமல் குமார் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 23/1 ரன்கள் எடுத்துள்ள தமிழ்நாடு இன்னும் 160 ரன்கள் செளராஷ்டிராவை விட பின்தங்கியுள்ளது. களத்தில் நாராயண ஜெகதீசன் 12*, கேப்டன் சாய் கிசோர் 6* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement