109 ரன்ஸ் 4 விக்கெட்ஸ்.. 48வது முறை.. தூளான தமிழ்நாடு அணியின் 36 வருட கனவு.. ஃபைனலுக்கு சென்ற மும்பை

- Advertisement -

இந்தியாவின் வரலாற்று மிகச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் செமி ஃபைனலில் தமிழ்நாடு மற்றும் மும்பை மோதின. மார்ச் இரண்டாம் தேதி மகாராஷ்டிராவில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு சுமாராக விளையாடி மும்பையின் தரமான பந்து வீச்சில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 43 விஜய் சங்கர் 44 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக தூஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு இளம் வீரர் முசீர் கான் சிறப்பாக விளையாடிய 55 ரன்கள் எடுத்தார். ஆனாலும் பிரிதிவி ஷா, கேப்டன் ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கியமான வீரர்கள் தமிழக பவுலர்களின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

தகர்ந்த கனவு:
அதனால் 106/7 என சரிந்த மும்பை 150 ரன்கள் கூட எடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 9வது பேட்டிங் இடத்தில் செய்த நட்சத்திர வீரர் சர்துள் தாகூர் அபாரமாக விளையாடி தன்னுடைய கேரியரிலேயே முதல் முறையாக சதமடித்து 13 பவுண்டரி 4 சிக்சருடன் 109 (105) ரன்கள் குவித்து தமிழக அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

அவருடன் தனுஷ் கோடியான் தன்னுடைய பங்கிற்கு 89* ரன்கள் எடுத்ததால் தப்பிய மும்பை முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்து அபாரமான கம்பேக் கொடுத்தது. தமிழ்நாடு சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 6, குல்தீப் சென் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தமிழ்நாடு வெற்றிக்கு போராட்டம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் மும்பையின் தரமான பந்து வீச்சில் மீண்டும் முடிந்தளவுக்கு போராடிய தமிழ்நாடு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 70 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் மீண்டும் பேட்டிங் செய்யாமலேயே இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை வரலாற்றில் 48வது முறையாக ரஞ்சிக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : ஹைதெராபாத் கேப்டனாக அறிவிக்கப் பட்டதால் கேஎல் ராகுல் சாதனையை உடைத்த பட் கமின்ஸ்

மறுபுறம் 7 வருடங்கள் கழித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றிருந்த தமிழ்நாடு இந்த படுதோல்வியால் பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. அதனால் கடைசியாக 1987/88இல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த தமிழ்நாடு அணி 36 வருடங்கள் கழித்து இம்முறை ரஞ்சிக் கோப்பையை வெல்லும் என்று ஆவலுடன் காத்திருந்த தமிழக ரசிகர்களின் கனவு மீண்டும் கனவாகவே போனது. குறிப்பாக இந்த போட்டியில் மொத்தம் 109 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த சர்துள் தாக்கூர் மும்பையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்று தமிழக ரசிகர்களின் கனவை உடைத்தார் என்றே சொல்லலாம்.

Advertisement