ஐபிஎல் 2024 : ஹைதெராபாத் கேப்டனாக அறிவிக்கப் பட்டதால் கேஎல் ராகுல் சாதனையை உடைத்த பட் கமின்ஸ்

Pat Cummins 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் 2016க்குப்பின் 2வது கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய வீரர் பட் கமின்ஸை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு பின் தென்னாபிரிக்க வீரர் ஐடன் மார்க்கம் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். குறிப்பாக 2023 எஸ்ஏ20 தொடரில் ஹைதராபாத் அணியின் கிளையான ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கோப்பையை வென்ற காரணத்தால் ஐபிஎல் தொடரிலும் அவரை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமனம் செய்தது.

- Advertisement -

பணக்கார கேப்டன்:
இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவருடைய தலைமையில் கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் ஹைதராபாத் வெளியேறியது. அந்த நிலையில் 2024 எஸ்ஏ20 தொடரில் மீண்டும் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்கம் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். அதனால் ஐபிஎல் தொடரில் மீண்டும் அவருக்கு ஹைதெராபாத் நிர்வாகம் வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்தார். அதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 20.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு போட்டி போட்டு அவரை வாங்கிய ஹைதராபாத் தற்போது தங்களுடைய புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது.

- Advertisement -

முன்னதாக 20.50 கோடிக்கு வாங்கப்பட்ட பட் கமின்ஸ் ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிகளுக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இது இந்திய ஜாம்பவான்களான எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது ஹைதராபாத் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளத்தை வாங்கும் கேப்டன் என்ற கேஎல் ராகுல் சாதனையை உடைத்துள்ள பட் கமின்ஸ் புதிய பெருமையை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: விராட் கோலியுடன் அந்த ஆர்சிபி வீரரும் ஸ்லெட்ஜிங் பண்ணாரு.. அதான் கம்பீர் சண்டை போட்டாரு.. நவீன்-உல்-ஹக்

இதற்கு முன் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீரர் கே.எல் ராகுல் 17 கோடிகளை வாங்கியதே முந்தைய அதிகபட்ச தொகையாகும். அந்த வகையில் பணக்கார கேப்டனாக இந்த சீசனில் களமிறங்கும் பட் கமின்ஸ் இதுவரை 42 ஐபிஎல் போட்டிகளில் 45 விக்கெட்டுகளும் 379 ரன்களும் அடித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement