இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 4ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற எலைட் குரூப் டி பிரிவின் போட்டியில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற திரிபுரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர்கள் அமித் சாத்விக் 5, துசார் ரகீஜா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 5 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் முகமது அலி 2 ரன்னில் ரன் அவுட்டானார். அதனால் 26/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய தமிழக அணி 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜெகதீசன் – சாய் கிஷோர் அசத்தல்:
அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் நாராயணன் ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். அதில் ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் திரிபுரா பவுலர்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அரை சதத்தை அடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெகதீசன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து தமிழ்நாட்டை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
நேரம் செல்ல மிகச்சிறப்பாக விளையாடிய அந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ஜெகதீசன் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (49) ரன்களை குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் அவுட்டாகாமல் திரிபுராவை அடித்து நொறுக்கிய சாய் கிஷோர் 3 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 87* (39) ரன்களை 223.08 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் செய்தார். அவருடன் ராஜ்குமார் 14* (9) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் தமிழ்நாடு 204/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
தமிழ்நாடு 2வது வெற்றி:
திரிபுராவுக்கு அதிகபட்சமாக சௌரப் தாஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய திரிபுராணியை மிகச் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாடு பவுலர்கள் 18.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினார்கள். அந்த அணிக்கு அதிகபட்சமாக முன்னாள் தமிழக வீரர் விஜய் சங்கர் 39, கேப்டன் மணிசங்கர் முராசிங் 32 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 2026 ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில் அந்த 2 வீரர்களை வாங்க சி.எஸ்.கே டார்கெட் செய்யும் – அஷ்வின் கணிப்பு
தமிழ்நாடு அணிக்கு குர்ஜப்நீத் சிங், சோனு யாதவ், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி இத்தொடரில் 2வது வெற்றியைப் பெற்று அசத்தியது. அத்துடன் 8 புள்ளிகளை பெற்றுள்ள தமிழ்நாடு அணி எலைட் குரூப் டி பிரிவில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.



