தந்தையை போலவே சதமடித்த ஜூனியர் சந்தர்பால் – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தனித்துவமான சாதனை

- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பைனல் வாய்ப்பை இழந்து விட்ட இரு அணிகளும் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் களமிறங்கின. புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சுமாராக பந்து வீசிய ஜிம்பாப்வே பவுவலர்களை திறம்பட எதிர்கொண்ட தொடக்க வீரர்கள் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் – தக்நரேன் சந்தர்பால் ஆகியோர் சிறப்பாக எதிர்கொண்டனர்.

ஆரம்பகட்ட ஸ்விங் பந்துகளுக்கு வளைந்து கொடுக்காமல் நங்கூரத்தை போட்டு நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர்கள் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இடையே மழை வந்தாலும் எதற்கும் அசராத அவர்கள் ஒரு கட்டத்திற்கு பின் அவுட்டாகாமல் அடம் பிடித்து ஜிம்பாப்வே அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய நிலையில் முதலாவதாக கேப்டன் ப்ரத்வெய்ட் அசத்தலான சதமடித்தார். அவருடன் பேட்டிங் செய்த சந்தர்பால் தனது பங்கிற்கு சதமடித்ததால் 2வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 221/0 ரன்கள் எடுத்து வலுவான நிலையுடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

தந்தையை போல்:
களத்தில் ப்ரத்வெய்ட் 116* (246) ரன்களுடனும் சந்தர்பால் 101* (291) ரன்களுடனும் உள்ளனர். முன்னதாக இப்போட்டியில் தன்னுடைய முதல் சதமடித்த தக்நரேன் சந்தர்பால் முன்னாள் ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிவ்நரேன் சந்தர்பால் அவர்களது மகன் என்பதை அனைவரும் அறிவோம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக விளையாடிய அவர் ஒருமுறை தனது தந்தையுடன் இணைந்து பேட்டிங் செய்தது உலக அளவில் வைரலானது.

அந்த வகையில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 52 போட்டிகளில் 6 சதங்கள் 12 அரை சதங்கள் உட்பட 2940 ரன்களை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக அறிமுகமான தக்நரேன் சந்திர்பால் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தினார். அதை விட தனது தந்தையைப் போலவே களமிறங்கியதும் பெய்ல்ஸை எடுத்து பேட்டிங் கார்ட் உருவாக்கும் வழக்கத்தை கொண்டுள்ள இவரும் தனது தந்தையை போலவே வித்தியாசமான கோணத்தில் நின்று எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் நங்கூரமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

மொத்தத்தில் பார்ப்பதற்கு அச்சு அசலாக தனது தந்தையை போலவே செயல்பட்ட அவருடைய பேட்டிங் கடந்த டிசம்பரிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானது. அப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான முதல் தொடரிலேயே பாராட்டும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தற்போது தன்னுடைய 3வது போட்டியிலேயே ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் சதமடித்து அசத்தியுள்ளார். முன்னதாக சிவ்நரேன் சந்தர்பால் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களை அடித்துள்ள நிலையில் தற்போது அவரது மகனும் முதல் முறையாக சதமடித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சதமடித்த முதல் தந்தை மகன் ஜோடி என்ற தனித்துவமான சாதனையை படைத்த அவர்கள் உலக அளவில் 12வது தந்தை மகன் ஜோடி என்ற பெருமையும் பெற்றனர். அந்த பட்டியல்:
1. லாலா – மொஹிந்தர் அமர்நாத் (இந்தியா)
2. கிறிஸ் – ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து)
3. ஹனிப் – சோயப் முகமது (பாகிஸ்தான்)
4. வால்டர் – ரிட்டர் ஹாட்லி (நியூஸிலாந்து)
5. இப்திகார் – மன்சூர் அலி கான் பட்டோடி (இந்தியா, இங்கிலாந்து)

இதையும் படிங்க: என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான், பார்டர் – கவாஸ்கர் தொடரின் வெற்றியாளர் பற்றி ஜெயவர்தனே அதிரடி கருத்து

6. ஜெப் – ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா)
7. நாசர் – முடாசர் (பாகிஸ்தான்)
8. கென் – ஹமிஸ் ரூத்தர்போர்ட் (நியூசிலாந்து)
9. விஜய் – சஞ்சய் மஞ்ரேக்கர் (இந்தியா)
10. தேவ் – டுட்லி நர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
11. ராட் – டாம் லாதாம் (நியூஸிலாந்து)
12. சிவ்நரேன் – தக்நரேன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்)

Advertisement