இந்தியாவில் கிரிக்கெட் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு விளையாடப்படும் கிரிக்கெட்டாக இருந்து வருகிறது. பொதுவாக இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு கொடுப்பது வழக்கமாகும். குறிப்பாக இந்திய அணிக்கு இங்குள்ள ரசிகர்கள் உச்சகட்ட ஆதரவை கொடுப்பது வழக்கமாகும். ஆனால் கொல்கத்தா போன்ற சில நகரங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இந்திய அணிக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருந்து வருகின்றனர்.
1996 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் தோல்வியை தாங்க முடியாமல் அங்குள்ள ரசிகர்கள் கொல்கத்தா ஈடன் கார்ட்ஸ் மைதானத்திற்கு தீ வைத்ததை மறக்க முடியாது. அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கருக்கு அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டதால் மொத்த ரசிகர்களும் மைதானத்தை புறக்கணித்தது பற்றி வரலாறு இன்றும் பேசுகிறது.
பிடித்த சென்னை:
இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல மைதானங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மைதானம் எது என்று தென்னாப்பிரிக்க வீரர் தப்ரிஸ் சம்சியிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்டார். அதற்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் தமக்கு பிடித்த மைதானம் என்று சம்சி பதிலளித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“சென்னை. அங்குள்ள ரசிகர்கள் உண்மையில் அறிவாளிகள் மற்றும் விளையாட்டின் போது இரு அணியினரின் நல்ல ஆட்டங்களை பார்த்து யார் நன்றாக விளையாடினாலும் அவர்களை பாராட்டுகிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல சென்னை ரசிகர்கள் எப்போதுமே இந்திய அணிக்கு முதன்மையான ஆதரவு கொடுப்பார்கள். அதை தாண்டி நல்ல கிரிக்கெட்டை விளையாடும் அணிக்கு அவர்கள் எப்போதும் கைதட்டாமல் இருந்ததில்லை.
அறிவான சென்னை:
குறிப்பாக 1999ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சதமடித்து போராடினார். இருப்பினும் அவரை கடைசி நேரத்தில் அவுட்டாக்கிய பாகிஸ்தான் 12 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அப்போது ஏமாற்றத்தை சந்தித்தாலும் திறமையுடன் விளையாடிய பாகிஸ்தான் அணியை சென்னை ரசிகர்கள் எழுந்து நின்ற கைதட்டி பாராட்டினர்.
இதையும் படிங்க: 2023 ஃபைனல் இந்தியா ஜெய்க்க வேண்டிய மேட்ச்.. விராட் கோலி வெற்றியை கொடுத்துட்டாரு.. ஸ்காட் போலண்ட்
அப்போதிலிருந்தே சென்னை ரசிகர்கள் “கிரிக்கெட்டைப் பற்றிய அறிவார்ந்த ரசிகர்கள்” என்று உலகம் முழுவதிலும் பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்தியாவிலேயே சென்னை தான் தமக்கு மிகவும் பிடித்த இடமென்று கூறுவார். அந்த வகையில் வந்தாரை வாழவைக்கும் என்று பெயர் பெற்ற சென்னை பல வெளிநாட்டு வீரர்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



