இந்தியாவில் துலீப் கோப்பை 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கான 4 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள அத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த 4 அணிகளில் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் முதல் சமீபத்திய இலங்கை தொடரில் அறிமுகமான ரியான் பராக் வரை பெரும்பாலான இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் அந்த 4 அணிகளில் எதிலுமே தமிழக வீரர் நடராஜன் செய்யப்படாதது தமிழ்நாடு ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் அந்த 4 அணிகளில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், அபாரஜித், ஜெகதீசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
நடராஜன் எங்கே:
ஆனால் காயமின்றி சமீபத்திய 2024 டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய நடராஜன் மட்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உள்ளூர் மற்றும் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜன் கடந்த 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அத்தொடரில் சில முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய நடராஜன் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக பந்து வீசிய அவர் ஆஸ்திரேலியாவை 32 வருடங்கள் கழித்து இந்தியா தோற்கடிக்க உதவினார். இருப்பினும் அதன் பின் காயமடைந்து குணமடைந்த அவருக்கு 4 வருடமாகியும் இந்திய அணியில் 2வது வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் கோபமடைந்த தமிழக ரசிகர்கள் தமிழக வீரர் மற்றும் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால் பிசிசிஐ வாய்ப்பு தர மறுத்த வருவதாக விமர்சித்தனர். இருப்பினும் அவற்றை மறுத்த நடராஜன் பிசிசிஐ தமக்கு அரவணைப்பும் வாய்ப்பும் கொடுக்காமல் போயிருந்தால் இவ்வளவு உயரம் வந்திருக்க முடியாது என்று சமீபத்தில் கூறினார். மேலும் காயத்தால் தம்மால் இந்தியாவுக்கு விளையாட முடியவில்லை என்று தெரிவித்த அவர் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்தால் இம்முறையும் இந்தியா தான் ஜெயிக்கும்.. பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து – ரவி சாஸ்திரி கருத்து
ஆனால் தற்போது ஒரு சாதாரண உள்ளூர் தொடரான துலீப் கோப்பையில் கூட மற்ற தமிழக வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள பிசிசிஐ நடராஜனை மட்டும் துண்டாக கழற்றி விட்டுள்ளது. இதிலிருந்தே நடராஜன் மீது பிசிசிஐ பாரபட்சமும் பாகுபாடும் பார்ப்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. அதனால் துலீப் கோப்பையில் விளையாடுவதற்கு கூடவா? நடராஜன் தகுதியில்லை இது தான் நீங்கள் கொடுக்கும் அரவணைப்பா? என்று பிசிசிஐயிடம் தமிழக கேள்வி எழுப்பி வருகின்றனர்.