52/6 என சரிந்த தமிழகம்.. அதிரடியாக காப்பாற்றிய டிகே.. பரோடாவை நடராஜன் முடித்தது எப்படி?

- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 29ஆம் தேதி புனே நகரில் 68வது லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு 33.3 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குறிப்பாக சாய் சுதர்சன் 15, ஜெகதீசன் 0, சாய் கிஷோர் 8, அபாரஜித் 0, விஜய் சங்கர் 11, இந்திரஜித் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 52/6 என சரிந்த தமிழகத்தை முக்கிய நேரத்தில் அனுபவ வீரர் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 (51) ரன்கள் விளாசி ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

அசத்திய நடராஜன்:
அவருடன் ஷாருக்கான் தம்முடைய பங்கிற்கு 31 ரன்கள் எடுத்த நிலையில் பரோடா சார்பில் அதிகபட்சமாக மேரிவாலா 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 163 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்திய பரோடா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோய்ட்ஸ்னில் சிங்கை முதல் ஓவரிலேயே சந்திப் வாரியர் டக் அவுட்டாக்கி தமிழகத்துக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

அதை அப்படியே பயன்படுத்திய நம்பிக்கை நட்சத்திரம் நடராஜன் ரத்வா 4, மிடெஷ் பட்டேல் 8, சஸ்வந்த் ராவாட் 18 என 3 முக்கிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அத்துடன் நிற்காத நடராஜன் அடுத்ததாக வந்த அன்கித் ராஜ்புட்டையும் 10 ரன்களில் தம்முடைய அபாரமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்டாக்கியதால் 45/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பரோடா தோல்வியின் பிடியில் சிக்கியது.

- Advertisement -

அதனால் மிடில் ஆர்டரில் கேப்டன் சலோங்கி அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்து போராடியும் 23.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பரோடா 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழகம் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 4, வருண் சக்கரவர்த்தி 3, சாய் கிஷோர் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: கோரிக்கையை நிராகரித்த முன்னாள் நட்சத்திர வீரர்.. பயிற்சியாளர் குழுவை அறிவித்த பிசிசிஐ.. ரசிகர்கள் அதிருப்தி

குறிப்பாக பேட்டிங்கில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அனுபவத்தை காட்டி அதிரடியாக விளையாடிய நிலையில் பந்து வீச்சில் நடராஜன் தம்முடைய அனுபவத்தை காட்டி 7 ஓவரில் 1 மெய்டன் உட்பட 38 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இப்படி அசத்தலாக செயல்பட்டும் நடராஜனுக்கு இந்திய அணில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது தமிழக ரசிகர்களின் ஆதரவாக இருக்கிறது.

Advertisement