2023ஆம் ஆண்டின் முக்கிய ஐசிசி விருதை வென்ற சூரியகுமார்.. யாருமே படைக்காத புதிய உலக சாதனை

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2023 காலண்டர் வருடத்தில் உலகம் முழுவதிலும் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரருக்கான விருதுக்கு சில முக்கிய வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

குறிப்பாக இந்தியாவின் சூரியகுமார் யாதவ், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தின் மார்க் சேப்மேன், உகாண்டாவை சேர்ந்த அல்ஃபேஸ் ரம்ஜானி ஆகிய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் விருது இந்தியாவைச் சேர்ந்த சூரியகுமார் யாதவுக்கு வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

புதிய சாதனை:
கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் 17 இன்னிங்ஸில் 733 ரன்களை 155.95 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 48.86 சராசரியில் வெளுத்து வாங்கிய சூரியகுமார் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் 56 பந்துகளில் சதமடித்த சூரியகுமார் தென் ஆப்பிரிக்க மண்ணில் 1 – 1 (3) என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா சமன் செய்ய உதவினார்.

அதன் வாயிலாக சவாலான தென்னாபிரிக்க மண்ணில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்திருந்தார். அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதற்கு அடையாளமாக செயல்படும் சூரியகுமார் கற்பனை செய்ய முடியாத வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாக ஐசிசி பாராட்டியுள்ளது.

- Advertisement -

முன்னதாக ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை சூரியகுமார் யாதவ் வென்றார். அந்த வரிசையில் தற்போது தொடர்ந்து 2வது முறையாக இந்த விருதை வென்றுள்ள அவர் ஐசிசி சிறந்த டி20 வீரர் விருதை 2 முறை வென்ற முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி உள்ளிட்ட உலகின் வேறு எந்த வீரர்களும் 2 முறை ஐசிசி சிறந்த டி20 வீரர் விருதை வென்றதில்லை.

இதையும் படிங்க: சும்மா மிரட்டாதீங்க.. அந்த நினைப்போட வந்தா ஒன்றரை நாளில் முடிச்சு விட்ருவோம்.. இங்கலாந்துக்கு சிராஜ் பதிலடி

மொத்தத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே திண்டாடி வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலிருந்தே மைதானத்தின் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கி மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். அதற்காக ஐசிசி விருதை அடுத்தடுத்த 2 வருடங்களில் வென்றுள்ள அவர் வருங்காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement