
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களை குவித்தது.
பின்னர் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்த அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த மைதானத்தின் தன்மையை அறிந்து கொள்ளவும், அதற்கு ஏற்றவாறு நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டதற்கும் எந்த ஒரு ரகசியமும் கிடையாது. எங்களுடைய திட்டங்கள் சரியாக இருந்தன.
குறிப்பாக இந்த தொடர் ஆரம்பிக்கும்போதே நாங்கள் டர்பன் வந்து இறங்கியதில் இருந்து ஒரு விடயத்தை மட்டுமே கணக்கில் கொண்டோம். அதாவது கடந்த முறை நாங்கள் இங்கு வந்த போது எவ்வாறு விளையாடினோமோ, அதே போன்று இம்முறையும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.
அந்த வகையில் இந்த தொடரில் ஏற்கனவே இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் இந்த கடைசி போட்டியிலும் வெல்ல முடியும் என்று நினைத்தாலேயே இந்த முடிவு கிடைத்திருக்கிறது. இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது போன்ற ஒரு பேட்டிங்கை பற்றி தான் நாங்கள் அதிகமாக பேசி வருகிறோம்.
இதையும் படிங்க : டக் அவுட்டான இடத்தில் அடுத்தடுத்த சதமடிக்க இது தான் திட்டம்.. சூரியகுமார் நன்றி.. திலக் வர்மா பேட்டி
கடந்த ஆண்டு இங்கு நடைபெற்ற தொடரில் விளையாடியது போன்று இம்முறையும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஏற்கனவே ஐசிசி கோப்பையை நாங்கள் வென்றுள்ளதால் எங்களுக்கு கூடுதல் உற்சாகம் உள்ளது. எனவே இதுபோன்ற சவாலான தென்னாப்பிரிக்க மைதானத்தில் நாங்கள் பெற்ற வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.