இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. ஆனாலும் இந்த போட்டி துவங்கி முதல் ஐந்து ஓவர்கள் மட்டுமே நடைபெற்ற வேளையில் மழை காரணமாக இந்த போட்டியில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இறுதிப்போட்டியும் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும் : சூரியகுமார் யாதவ்
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது வர இருக்கும் வேளையில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே இந்திய டி20 அணி வீழ்த்தி பெற்ற இந்த தொடர் வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இப்படி இந்த டி20 தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது :
இந்த போட்டியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைத்தான் நாங்கள் விரும்பினோம். ஆனால் இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இந்த தொடரில் ஜீரோவுக்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் இருந்து வந்து தற்போது தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி.
இந்த தொடரில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே அசத்தலாக செயல்பட்டோம். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அனைவருமே நன்றாக விளையாடி இருந்தனர். ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே நன்றாக பந்து வீசி இருந்தனர்.
இதையும் படிங்க : ஆஸியை அடிக்க காத்திருந்தேன்.. இந்தியாவுக்காக அந்த வாய்ப்பு கிடைச்சா கனவு நிஜமாகும்.. அபிஷேக் பேட்டி
தற்போதுள்ள அணியில் அனைவருமே டி20 போட்டிகளில் நல்ல அனுபவத்தையும் வளர்த்துள்ளனர். எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இப்படி ஒரு பலமான அணி இருப்பது உண்மையிலேயே ஒரு ஆரோக்கியமான தலைவலி தான் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



