இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. அப்போது சுதாரித்த இந்தியா 3வது போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த தொடரை சமன் செய்தது.
அத்துடன் 4வது போட்டியில் 167 ரன்களை அடித்த இந்தியா பின்னர் ஆஸ்திரேலியாவை 119 ரன்களுக்கு சுருட்டி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதியாக நவம்பர் 8ஆம் தேதி புகழ்பெற்ற காபா மைதானத்தில் கடைசி போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 4.5 ஓவரில் 52/0 ரன்கள் எடுத்தது.
தொடர்நாயகன் அபிஷேக்:
இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 23* (13), சுப்மன் கில் 29* (16) ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 2 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா இத்தொடரின் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக்கு 19, 68, 25, 28, 23* என தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடி அடிப்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்ததாக அபிஷேக் தெரிவித்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தமக்கு கிடைத்தால் கனவு நிஜமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கனவு நிஜமாகும்:
“இந்த சுற்றுப்பயணத்துக்காக நான் காத்திருந்தேன். இத்தொடரில் நான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டது முதலே உற்சாகத்துடன் காத்திருந்தேன். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் பிட்ச்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதனால் நாங்கள் பெரிய ஸ்கோர் அடிப்போம் என்று கருதினேன். இத்தொடரில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஹேசல்வுட் பவுலிங் செய்த விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவருக்கு எதிரான போட்டியை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்”
இதையும் படிங்க: மழையால் முடிந்த 5வது டி20.. தொடர்ந்து 15வது வருடமாக ஆஸி மண்ணில் சாதனை படைத்த இந்தியா
“அவரைப் போன்ற பவுலர்களுக்கு எதிராக அடிக்க நான் பயிற்சிகளை எடுத்தேன். ஏனெனில் அப்போது தான் உங்களுடைய அணிக்காக உங்களால் வேகத்தை கட்டமைக்க முடியும். சுதந்திரமாக விளையாடி பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான பொறுப்பை எங்கள் கேப்டன், பயிற்சியாளர் எனக்கு கொடுத்துள்ளனர். எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான தெளிவு மற்றும் இடைவெளியும் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை மிகப்பெரிய தொடர். ஒருவேளை அதில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அது கனவு நிஜமான தருணமாக இருக்கும். அதற்கு தயாராக இருப்பதை நான் உறுதி செய்வேன்” என்று கூறினார்.



