இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இருப்பினும் 3வது போட்டியில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்தது.
4வது போட்டியில் 168 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா பின்னர் ஆஸ்திரேலியாவை 119 ரன்களுக்கு சுருட்டி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலையில் கடைசிப் போட்டி நவம்பர் 8ஆம் தேதி புகழ்பெற்ற காபா மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
காபாவில் மழை:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 23* (13) ரன்கள் எடுத்தார். அவருடன் சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 29* (16) ரன்கள் எடுத்ததால் இந்தியா 52/0 ரன்கள் எடுத்தது. அப்போது வந்த மழை தொடர்ந்து இடியுடன் பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
அதனால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோற்றது. மறுபுறம் 2 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. இதன் வாயிலாக ஆஸ்திரேலியா மண்ணில் சர்வதேச டி20 இருதரப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை இந்தியா தொடர்கிறது.
15வது வருடமாக சாதித்த இந்தியா:
வரலாற்றில் 2011 முதல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் முதல் முறையாக 2011/12 சீசனில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்ததாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தோனி தலைமையில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை வென்றதை மறக்க முடியாது.
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்து விராட் கோலியின் சாதனையை நூலிழையில் தவறவிட்ட – அபிஷேக் சர்மா
2018/19 சீசனில் நடைபெற்ற தொடர் 1 – 1 (3) என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 2020/21 சீசனில் நடைபெற்ற தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் வென்று இந்தியா அசத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் வென்று இந்தியா அசத்தியுள்ளது. இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 15வது வருடமாக ஒரு டி20 தொடரில் கூட தோற்காமல் இந்தியா சாதனை வெற்றி நடை போட்டு வருகிறது.



