
எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கப்போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து பேக்கப் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக துருவ் ஜுரேல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
31 வயதான ஜிதேஷ் சர்மா சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் 9 போட்டிகளில் விளையாடி 147 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 100 ரன்களை குவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாகவே டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த அவருக்கு மீண்டும் தற்போது இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இளம் வீரரான துருவ் ஜுரேலை தாண்டி இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மாவை பேக்கப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் பேசியதாவது : ஏற்கனவே கடந்த டி20 உலக கோப்பைக்கு பின்னர் நாங்கள் ஜிதேஷ் சர்மாவை அணுகி பேசியிருந்தோம்.
அதாவது 2026 டி20 உலக கோப்பைக்காக தற்போது புதிய அணியை உருவாக்கி வருகிறோம். எனவே உங்களுடைய ஆட்டத்தை நீங்கள் இதேபோன்று தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதிலும் குறிப்பாக தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிக்காமல் அதிரடியாக விளையாடும் உங்களது ஆட்டத்தை மாற்றாதீர்கள்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லின் வருகையால் சஞ்சு சாம்சனுக்கு தான் சோகம்.. ஆனா ஜிதேஷ் சர்மாவுக்கு ஹேப்பி தான் – விவரம் இதோ
ஐபிஎல் தொடரிலும் சரி, உள்ளூர் போட்டியிலும் சரி அதிரடியான சுயநலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய நீங்கள் அதையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அவருடைய சுயநலமற்ற அதிரடியான ஆட்டமே அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க காரணம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.