சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள வேளையில் மூன்று போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூரியகுமார் யாதவ் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் நேற்று ஜனவரி 25-ஆம் தேதி கௌஹாத்தி நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.
பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா 68 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 57 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மாபெரும் சாதனை ஒன்றினை சூரியகுமார் யாதவ் கேப்டனாக நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக விராட் கோலியை கடந்து அவர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : உ.கோ தொடரில் பங்கேற்பது சிக்கல்.. வாஷிங்டன் சுந்தர் விடயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது பி.சி.சி.ஐ?
இந்த பட்டியலில் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக 50 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து எம்.எஸ் தோனி 42 வெற்றிகளை பெற்றுள்ளார். அவர்கள் இருவருக்கும் அடுத்து சூரியகுமார் யாதவ் தற்போது 33 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். நான்காவது இடத்தில் விராட் கோலி 32 வெற்றிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



