ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வரும் நடப்புச் சாம்பியன் இந்தியா ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று ஹாங்காங்கை தனது 2வது லீக் போட்டியில் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்ட ரோகித் சர்மா அதிரடியாக 21 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் ராகுல் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாக விளையாடி 2 சிக்சருடன் 36 (29) ரன்களில் அவுட்டானார்.
அந்த சமயத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விராட் கோலியுடன் இணைந்து 200 ரன்களை தொடுவதற்காக அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு மைதானத்தின் நாலா புறமும் சுழன்றடித்தார். கடைசி வரை அவுட்டாகாமல் ஹாங்காங் பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 ஓவர்களில் 192/2 ரன்களை எடுக்க உதவியது. இதில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் விராட் கோலி அரைசதம் அடித்து 59* (44) ரன்கள் எடுக்க மறுபுறம் மிரட்டலாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.
சிறப்பான வெற்றி:
அதை தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஹாங்காங் அணிக்கு தொடக்க வீரர்கள் முர்த்தசா 9 (9) ரன்களிலும் கேப்டன் நிஜாகத் கான் 10 (12) ரன்களிலும் ஆரம்பத்திலேயே அவுட்டானார்கள். அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாட முயன்ற பாபர் ஹயட் 3 பவுண்டரி 2 சிக்சருடன் வெற்றிக்கான நம்பிக்கை கொடுத்து 41 (35) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சில ஓவர்களிலேயே அவருடன் சிறப்பாக செயல்பட்ட கிஞ்சிட் ஷா 30 (28) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஐசாஸ் கான் 14 (13) ரன்களில் அவுட்டானார். அதனால் வெற்றி வாய்ப்பை இழந்த அந்த அணிக்கு கடைசி நேரத்தில் ஜீசன் அலி அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26* (17) ரன்களும் மெக்கன்சி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 (8) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 152/2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற இந்தியா முதல் போட்டியில் ஏற்கனவே பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த காரணத்தால் குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற 2 லீக் போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மிரட்டல் பேட்டிங்:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 68* (26) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் கடந்த போட்டியில் 18 ரன்களில் அவுட்டான நிலையில் இந்த போட்டியில் அதற்கு ஈடாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவின் மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் அழைப்பதற்கேற்ப மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடித்த அவர் பார்த்த அத்தனை பேர்களின் கண்களுக்கு அழகான பேட்டிங்கை விருந்து படைத்தார்.
மொத்தமாக 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 68* (26) ரன்களை 261.64 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் 60 ரன்களை பவுண்டரிகளின் வாயிலாக மட்டுமே சேர்த்தார் என்பதே அவருடைய திறமைக்கும் தரத்திற்கும் சான்றாகும். அதற்காக ஹாங்காங் பவுலர்கள் தானே என்று கூறாதீர்கள். ஏனெனில் அதே பவுலர்களுக்கு எதிராக ராகுல், ரோஹித், விராட் ஆகியோரால் 200க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் அடிக்க முடியவில்லை.
அபார சாதனை:
அதிலும் ஹாரூன் யாதவ் விசிய 20ஆவது ஓவரில் 6, 6, 6, 0, 6, 2 என ஹாட்ரிக் சிக்சர் உட்பட மொத்தம் 26 ரன்களை தெறிக்கவிட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20வது ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்து ஆல் டைம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 26, ஹாங்காங்க்கு எதிராக, 2022*
2. ரோகித் சர்மா : 19, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018
3. தீபக் சஹர் : 19, நியூசிலாந்துக்கு எதிராக, 2021
4. சூர்யகுமார் யாதவ் : 19, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022
இதையும் படிங்க: நாங்க 13 ஆவது ஓவர் வரை நல்லாதான் ஆடினோம். அவர் வந்து எல்லாத்தையும் மாத்திட்டாரு – ஹாங்காங் கேப்டன் வருத்தம்
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்க்கு (36) பின் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும் மிகவும் குறைந்த இன்னிங்சில் (25 இன்னிங்ஸ்) 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங் (30 இன்னிங்ஸ்) சாதனையையும் தகர்த்தார்.



