விராட் கோலி 3வது இடத்தில் ஆடக்கூடாது – புதிய வீரருக்காக கம்பீர் கோரிக்கை, கடுப்பில் ரசிகர்கள்

Gautam-Gambhir-and-Virat-Kohli
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் வரலாற்றின் 15வது ஆசிய கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய இததொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதற்கு ஈடாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

Virat Kohli IND vs PAK

இருப்பினும் 33 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் அதிக சதங்கள் அடித்த ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் நிற்கும் விராட் கோலியின் அருமையை உணர்ந்து நிறைய வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அவர்களது ஆதரவுடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் களமிறங்கிய அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அதிர்ஷ்டத்துடன் 35 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
இருப்பினும் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்து மெதுவாக விளையாடியதால் மீண்டும் விமர்சனத்தை சந்தித்த அவர் ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தடுமாறாமல் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்களை 130க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் விளாசி பதிலடி கொடுத்தார். அதனால் நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பார்முக்கு திரும்பி விட்டதாக மகிழ்ச்சியடைந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஹாங்காங்க்கு எதிராக தரமற்ற பந்துவீச்சில் 60 ரன்களை எடுப்பதை வைத்து பார்முக்கு வந்துவிட்டார் என்று கருத முடியாது எனக்கூறிய அவர் அந்த ரன்கள் தன்னம்பிக்கை மட்டுமே கொடுக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Kohli

இந்நிலைமையில் ஹாங்காங்க்கு எதிரான போட்டி உட்பட சமீப காலங்களில் விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் ஆகியோரை விட உச்சகட்ட பார்மில் எதிரணிகளை பந்தாடும் சூர்யகுமார் யாதவ் வரும் போட்டிகளில் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என மீண்டும் வித்தியாசமான கருத்தை கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தற்போது விராட் கோலியை விட நல்ல பார்மில் இருக்கும் அவர் 4வது இடத்தில் விளையாடுவதை விட 3வது இடத்தில் விளையாடினால் இன்னும் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அபாரமாக செயல்படுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதற்கு பின்புறம் காரணம் உள்ளது. அதாவது ஒருவர் ஃபார்முக்கு வரவேண்டும் என்பதற்காக நல்ல பார்மில் இருக்கும் ஒருவரை நீங்கள் பின்தள்ள முடியாது. அவர் (சூர்யா) இங்கிலாந்தில் மற்ற அனைவரும் தடுமாறியபோது அபாரமாக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்தினார். மேலும் அவர் 21, 22 வயது அல்லாமல் 30 வயதை தொட்டுள்ளதால் அவருக்கு நிறைய நேரங்கள் கிடையாது. அதனால் அவருடைய பார்மை நாம் அதிகப்படியாக பயன்படுத்திக்கொள்ள 3வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்”

Gambhir

“அதே சமயம் விராட் கோலி நிறைய அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப 4வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். தன்னிச்சையாக இப்போது முதல் உலக கோப்பைக்கு முன்பாக வரை சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய நான் விரும்புகிறேன். அதில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது தற்போது 31 வயது தொட்டுள்ள சூரியகுமார் நல்ல பார்மில் இருப்பதாலும் எந்த இடத்திலும் களமிறங்கி பேட்டிங் செய்யும் திறமை பெற்றிருப்பதாலும் அவருக்கு 3வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக விராட் கோலி ஃபார்முக்கு வரவேண்டும் என்பதற்காக 3வது இடத்தை வீணடிக்காமல் நல்ல பார்மில் இருக்கும் சூர்யாவுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:  ZIM vs AUS : 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாறு படைத்த ஜிம்பாப்வே – நடந்தது என்ன?

ஆனால் ஆரம்ப காலம் முதல் இப்போது வரை 3வது இடத்தில் களமிறங்கி எதிரணிகளை வெளுப்பதற்கு பிறந்தவரை போல் அந்த இடத்தில் அபாரமாக விளையாடி ஏராளமான ரன்களையும் சரித்திர வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ள விராட் கோலியை 4வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் சொல்வது நிறைய ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது. குறிப்பாக விராட் கோலியை எப்படியாவது அணியிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆலோசனையை கௌதம் கம்பீர் தெரிவிப்பதாக ரசிகர்கள் சாடுகின்றனர்.

Advertisement