
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று ஜனவரி 21-ஆம் தேதி நாக்பூர் நகரில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கும் சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தனது நூறாவது சர்வதேச டி20 ஆட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதன்மூலம் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு அடுத்து நான்காவது இந்திய வீரராக 100 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக பூர்த்தி செய்ய காத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தனது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்த சூரியகுமார் யாதவ் தெளிவான விளக்கங்களை அளித்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் டி20 போட்டிகளில் ரன் எடுக்க திணறுவது உண்மைதான். ஆனால் அதற்காக ஒருபோதும் என்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ள மாட்டேன். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் நான் அதிரடியாக விளையாடி வந்தேன். அந்தப் பாதை தான் எனக்கு வெற்றிக்கும் வழி வகுத்து தந்தது. அதை நான் எப்போதுமே பின்பற்றுவேன்.
என்னுடைய அதிரடியான ஆட்டத்தில் எப்போதும் மாற்றம் இருக்காது. டி20 போட்டி என்பது ஒரு குழு விளையாட்டு. ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை விட அணியின் வெற்றி தான் முக்கியம் என்றும் சூரியகுமார் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எங்களது முடிவில் மாற்றம் இல்லை.. நாங்க டி20 உலககோப்பையில் விளையாட வரமாட்டோம் – வங்கதேச வாரியம் அறிவிப்பு
கடந்த 2025-ஆம் ஆண்டு மட்டும் இந்திய அணிக்காக 22 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதோடு அவரது சராசரியும் 14-க்கும் குறைவாக குறைந்துள்ளது. அவரது பேட்டிங் பார்ம் மீண்டும் திரும்பி வந்தால் அது டி20 உலககோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு பலமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.