ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பான போட்டிகளுடன் நடைபெற்று வரும் இத்தொடரில் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து செமி ஃபைனல் போட்டிகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளன.
அதில் இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்நிலையில் 2024டி20 உலகக் கோப்பையின் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிவில் சர்வதேச 20 ஓவர் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பேட்ஸ்மேன் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இந்தியாவின் சூரியகுமார் யாதவ் இழந்துள்ளார்.
601 நாட்கள் 2 புள்ளிகள்:
கடந்த 2021இல் அறிமுகமான அவர் பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகள் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தின் அனைத்து புறங்களிலும் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதனால் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளை அள்ளிய அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாகவும் முன்னேறினார். அந்த இடத்தைக் கிட்டத்தட்ட 2 வருடங்களாக சூரியகுமார் தக்க வைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் அவர் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. மறுபுறம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் 76 ரன்கள் குவித்தார். அதன் காரணமாக தற்போது சூரியகுமாரை (842) முந்தியுள்ள அவர் (844) வெறும் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
அதனால் கடந்த 601 நாட்களாக தன்வசம் வைத்திருந்த உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற மகுடத்தை இழந்த சூரியகுமார் 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதே பட்டியலில் இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 7வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா 13 இடங்கள் முன்னேறி 38வது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 டீம்ல யார் ஜெயிச்சாலும் புதிய ரெக்கார்ட் கன்பார்ம்.. இறுதிப்போட்டிக்கு போகப்போவது யார்? – விவரம் இதோ
அதே போல டி20 பவுலர்கள் பட்டியலில் அக்சர் பட்டேல் 8, குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 11, அரஷ்தீப் சிங் 17, ஜஸ்ப்ரித் பும்ரா 44 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஹர்திக் பாண்டியா 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக அணிகள் தர வரிசையில் தொடர்ந்து இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிப்பது குறிப்பிடத்தக்கது.



