ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 41வது போட்டியில் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதையும் சேர்த்து 9 போட்டிகளில் 5வது வெற்றியைப் பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.
அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 144 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசின் 71, அபினவ் மனோகர் 43 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய மும்பை 15.4 ஓவரிலேயே 146/3 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
மனைவிக்காக வெற்றி:
அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா 70 (46), சூரியகுமார் யாதவ் 40* (19) ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில் தம்முடைய மனைவி மும்பையிலிருந்து வந்து இப்போட்டியில் தம்முடைய ஆட்டத்தைப் பார்த்தது மகிழ்ச்சியளித்ததாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அவருக்காகவே இந்தப் போட்டியை வெல்ல விரும்பியதாகவும் சூரியகுமார் கூறியுள்ளார்.
மேலும் நேர்மறையான மனநிலையுடன் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதே மும்பையின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ரோகித் சர்மா பேட்டிங்கில் தம்முடைய வேலையை எளிதாக உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனது மனைவி மும்பையில் இருந்து இங்கே வந்தார்”
ரோஹித் உதவி:
“இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். அவர் இங்கே இருந்ததால் நாங்கள் வெற்றி பெற வேண்டும். மிகுந்த நேர்மறையான மனநிலையுடன் களத்திற்கு வந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடி ஏற்கனவே பெற்றுள்ள வேகத்தை தொடர்வது முக்கியம் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக 4 போட்டிகளை வென்றது மிகச் சிறப்பான உணர்வை கொடுக்கிறது”
இதையும் படிங்க: இஷான் கிஷன் விக்கெட் விடயத்தில் நடந்தது என்ன? அம்பயர் அவுட் கொடுக்க என்ன காரணம்? – விவரம் இதோ
“ரோஹித் சர்மா என்னுடைய வேலையை மிகவும் எளிதாக மாற்றினார். அவருடன் சேர்ந்து நான் நல்ல வகையில் பேட்டிங் செய்வது மட்டுமே தேவையாக இருந்தது. தற்போது ரோஹித் மீண்டும் எளிதாக ரன்கள் குவிக்கத் துவங்கியுள்ளது எங்களுடைய அணிக்கு நல்ல அறிகுறி. வலைப்பயிற்சியில் நான் தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகளை அடிக்கப் பயிற்சிகளை எடுத்து வருகிறேன். நான் எங்களது அணியின் வெற்றிகளில் பங்காற்ற விரும்புகிறேன். அதை இன்றும் செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார்.



