
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29, தீபக் சஹர் 28* ரன்கள் எடுத்தனர்.
சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அகமது 4, கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணிக்கு கேப்டன் ருத்ராஜ் அதிரடியாக விளையாடி 53 (26) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் ராகுல் திரிபாதி, சிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரண் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா நங்கூரமாக விளையாடி 65* (45) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 19.1 ஓவரில் 158-6 ரன்களை எடுத்த சென்னை போராடி வென்று இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மும்பை அணிக்கு அதிகபட்சமாக 24 வயது இளம் வீரர் விக்னேஷ் புதூர் போட்டியின் முடிவில் தோனியே பாராட்டும் அளவுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்தது தோல்வியை கொடுத்ததாக மும்பை கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தோனியே பாராட்டிய விக்னேஷை கடந்த 10 மாதங்களாக மும்பை அணி நிர்வாகம் பட்டைத் தீட்டியதாக அவர் பாராட்டியுள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் அதிரடியாக விளையாடி வெற்றியைப் பறித்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“கண்டிப்பாக நாங்கள் 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்தோம். ஆனால் எங்களுடைய வீரர்கள் வெளிப்படுத்திய போராட்டம் திடமானது. இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு 10 மாதங்கள் பயிற்சிக் கொடுத்து சரியான வாய்ப்புகளை வழங்குவதற்கு மும்பை அணி பெயர் போனது. விக்னேஷ் அதில் ஒரு ப்ராடக்ட். போட்டி ஆழமாக செல்லும் என்று நினைத்து அவருடைய ஒரு ஓவரை பாக்கெட்டில் வைத்திருந்தேன்”
இதையும் படிங்க: 0.12 நொடியில் தோனி செஞ்ச ஸ்டம்ப்பிங் உலகிற்கு அப்பாற்பட்டது.. அந்த சப்போர்ட் செய்றாரு.. ஆட்டநாயகன் நூர் பேட்டி
“ஆனால் அவருக்கு 18வது ஓவரை கொடுத்திருந்தால் அது மூளையற்ற முடிவாக இருந்திருக்காது. பனி எதுவும் இல்லை. பிட்ச் கொஞ்சம் நின்று வந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் பேட்டிங் செய்த விதம் வெற்றியை எங்களிடமிருந்து பறித்து விட்டது. அது நீண்ட பயணம்” என்று கூறினார்.