நீங்க தான் அடுத்த ஏபிடி’யா? ரசிகர்களின் கேள்விக்கான சூப்பர் பதிலுடன் சுழன்றடிக்கும் ரகசியத்தை பகிர்ந்த சூர்யகுமார்

Suryakumar-Yadav-2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மௌன்ட் மௌங்கனி நகரில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சூரியகுமார் யாதவ் விளாசிய 111* (51) ரன்கள் சதத்தால் 20 ஓவர்களில் 191/6 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய நியூசிலாந்து முதல் ஓவரிலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு சுருண்டது.

Suryakumar Yadav

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் போராடி 61 (52) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா விக்கெட்களை சாய்த்தார். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சேர்ந்து வெறும் 69 (69) ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனி ஒருவனாக 111* (51) ரன்களை குவித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இத்தனைக்கும் இதர பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்த அதே நியூசிலாந்து பவுலர்களை முதல் பந்திலிருந்தே அசால்டாக அடித்து நொறுக்கிய அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

ஒரே ஏபிடி, ஒரே சூர்யா:

கடந்த 2021இல் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் இதே போல் சரவெடியாக செயல்பட்டு வரும் அவர் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அதை நேற்றைய போட்டியிலும் செய்து காட்டிய அவரை பெரும்பாலான ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய முன்னாள் ஜாம்பவான்களும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ஏற்கனவே அழைக்க தொடங்கி விட்டார்கள்.

AB DE villiers Suryakumar Yadav

சொல்லப்போனால் தம்மையும் மிஞ்சும் வகையில் சூரியகுமார் செயல்படுவதாக அந்த பெயரை முதல் முறையாக எடுத்த தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் சமீபத்தில் பாராட்டினார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் தான் அடுத்த ஏபி டீ வில்லியர்ஸா? என்று நேற்றைய போட்டி முடிவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எப்போதுமே நான் முதல் சூரியகுமார் யாதவாக இருக்க விரும்புகிறேன் என்று அடக்கமாக பதிலளித்து அவர் பேசியது பின்வருமாறு. “உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை நான் பெறவில்லை. ஆனால் அவரிடம் நான் நிறைய பேசியுள்ளேன். மேலும் தற்போது செய்வதை தொடர விரும்பும் நான் அடுத்த சூரியகுமார் யாதவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் வீடியோ கேம் ரோபோட் போல அடித்து நொறுக்குவதாக விராட் கோலி பாராட்டியது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த சூரியகுமார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருடன் விளையாடிய அனுபவமே தமக்கு கை கொடுப்பதாக கூறினார். அத்துடன் பயிற்சியில் என்ன செய்கிறேனோ அதை களத்தில் செய்வதே நாலாபுறமும் சுழன்றடிக்கும் ரகசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

Suryakumar Yadav

“என்னைப் பற்றி வாழ்த்து செய்திகளும் ட்வீட்களும் வரும் போது நான் நல்லபடியாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய போது நிறைய கற்றுக் கொண்டேன். தற்போது விராட் கோலியுடன் இணைந்து கற்றுக்கொண்டு விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அனைத்து புறங்களிலும் அடிப்பதில் ரகசியம் ஒன்றுமில்லை. பயிற்சியில் என்ன நான் செய்கிறேனோ அதை மாற்றாமல் களத்தில் அதிரடியாக அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்கிறேன்”

“அதுதான் முக்கியம். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பொறுமையை பற்றி நினைக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும். அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதை பயிற்சி மற்றும் ஹோட்டல் அறையில் நினைக்க வேண்டுமே தவிர களத்தில் நினைக்க கூடாது. மேலும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். எப்பொதுமே தோற்று விடுவோம் என்ற பயத்தை நான் களத்திற்கு எடுத்து வருவதில்லை” என்று கூறினார்.

Advertisement