தலைநகர் டெல்லியில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் சேசிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 135-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, நித்திஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.
கேப்டனின் சோதனைகள்:
இந்த வெற்றிக்கு ஆல்ரவுண்டராக முக்கிய பங்காற்றிய நிதிஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் 41-3 என ஆரம்பத்திலேயே இந்தியா சரிந்த போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியதாக கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது போன்ற சூழ்நிலையை பார்க்க விரும்பியதாக தெரிவிக்கும் அவர் சில நேரங்களில் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரால் பந்து வீச முடியாது என்று கூறியுள்ளார்.
அதனாலேயே இப்போட்டியில் நித்திஷ் ரெட்டி, அபிஷேக் ஷர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் உட்பட 7 வீரர்களை வேண்டுமென்றே பவுலிங் செய்து சோதித்து பார்த்ததாகவும் சூரியகுமார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சூழ்நிலையை நான் பார்க்க விரும்பினேன். 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன்”
7 பவுலர்கள்:
“ஐபிஎல் அணிக்காகவும் வலைப்பயிற்சியிலும் என்ன செய்கிறீர்களோ அதை இந்திய அணிக்காக செய்யுங்கள் என்று வீரர்களிடம் கூறியுள்ளேன். ஜெர்ஸி மட்டுமே மாறும். மற்ற அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளேன். சில நேரங்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியாது, வாஷிங்டன் சுந்தரால் பந்து வீச முடியாது”
இதையும் படிங்க: டி20 உ.கோ: 82 ரன்ஸ்.. மந்தனா, ஹர்மன் மிரட்டல்.. 10 வருட சாதனை வெற்றி.. இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா
“அதனால் 170 – 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன். எனவே ஹர்திக் பாண்டியா இல்லாமல் அதிகமான பவுலர்களை பயன்படுத்தினேன். இது நித்திஷ் ரெட்டியின் நாள். எனவே அவருக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பினேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.



