ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் 12வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா – ஷாபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் நம்பிக்கை நாயகி மந்தனா 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 (38) ரன்கள் விளாசி அவுட்டானார்.
இந்தியா அதிரடி:
அடுத்த பந்திலேயே ஷாபாலியும் 43 (40) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரை சதமடித்து 52* (27) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ஜெமிமா 16, ரிச்சா கோஸ் 6* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 172-3 ரன்கள் குவித்து அசத்தியது. இலங்கைக்கு அதிகபட்சமாக கேப்டன் சமாரி 1, காஞ்சனா 1 விக்கெட் எடுத்தனர்.
அதன் பின் 173 ரன்களை துரத்திய இலங்கைக்கு விஸ்மி 0, கேப்டன் அத்தபட்டு 1, ஹர்ஷிதா சமரவிக்ரமா 3 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 6-3 என ஆரம்பத்திலேயே சரிந்த இலங்கைக்கு மிடில் ஆர்டரில் கவிசா திலாரி 21, சஞ்சீவினி 20 ரன்களில் ரேணுகா சிங் வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினர். இறுதியில் இலங்கையை 19.5 ஓவரில் 90+ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாதனை வெற்றி:
இதன் வாயிலாக மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2014இல் வங்கதேசத்துக்கு எதிராக 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 2, அருந்ததி ரெட்டி 2, ஆசா ஷோபனா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தங்களுடைய முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை போராடி வீழ்த்தியது. ஆனால் இப்போட்டியில் பெரிய வெற்றியை பெற்றுள்ள இந்தியா +0.576 ரன்ரேட் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 86 ரன்ஸ்.. வாயில் சவால் விட்ட வங்கதேசத்தை.. செயலில் நொறுக்கிய இந்தியா.. மிகப்பெரிய சாதனை வெற்றி
அதனால் பாகிஸ்தான், நியூசிலாந்தை முந்தி குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்தியா செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற 2022 மகளிர் ஆசிய கோப்பையில் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தோல்வியால் ஆசிய சாம்பியன் இலங்கையை டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா நாட் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பி கொஞ்சமாக பழித்தீர்த்துக் கொண்டது.



