மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் கொல்கத்தா அணிக்கு செல்ல இருப்பதாகவும், அப்படி அவர் அங்கு செல்லும் பட்சத்தில் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க கொல்கத்தா அணியின் நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் கடந்து சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு செய்திகள் பரவி வருகிறது.
சூரியகுமார் யாதவ் வெளியேற வாய்ப்பில்லை :
மேலும் ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக சில ஆண்டுகள் விளையாடியிருந்த சூரியகுமார் யாதவ் அந்த அணியின் நிர்வாகத்திடம் நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளார் என்பதால் இந்த மாற்றம் நடக்கும் என்று கூறப்பட்டது. அதோடு இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சூர்யகுமார் யாதவ் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளதால் அவர் கொல்கத்தா அணிக்கு செல்லும் பட்சத்தில் சூரியகுமார் யாதவே கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இப்படி ஒரு தகவல் பரவி வருவது முற்றிலும் சாத்தியமே இல்லாத ஒன்று என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஏனெனில் ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்துவிட்டு ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமித்தது. ஆனாலும் அவரது தலைமையில் விளையாடிய அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
இதன் காரணமாக பாண்டியாவை உடனே நீக்காமல் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு கேப்டன்சி வாய்ப்பினை நிச்சயம் மும்பை அணி வழங்கும். அப்படி அடுத்த ஆண்டிலும் பாண்டியா சிறப்பாக செயல்படாத பட்சத்தில் அவரை நீக்க வாய்ப்புள்ளதே தவிர உடனடியாக மும்பை அணி கேப்டனை எப்போதும் மாற்றியது கிடையாது.
அதேபோன்று சூரியகுமார் யாதவ் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட வீரர்து வெளியேற்றுவதில் நிச்சயம் மும்பை அணி உடன்படாது. ஒருவேளை சூரியகுமார் யாதவ் தானாக விருப்பப்பட்டு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறினால் மட்டுமே மெகா ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். அப்படி மெகா ஏலத்தில் கலந்து கொண்டாலும் அவர் எந்த அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது அந்த ஏலத்தின் முடிவில் தான் தெரியும்.
இதையும் படிங்க : 1294 நாட்கள்.. 63 வருடங்கள்.. மட்டமான முடிவால் வங்கதேசத்திடம்.. பாகிஸ்தான் அவமான உலக சாதனை
அதனால் நிச்சயம் மும்பை அணி டிரேடிங் முறையில் சூரியகுமார் யாதவை மாற்றுவதற்கு முனைப்பு காட்டாது. அவரை அணியில் முதன்மை வீரராக தக்க வைத்து நிச்சயம் பெரிய தொகையையும் அவருக்கு சம்பளமாக வழங்கி அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தான் அந்த அணி ஈடுபடும் என்று நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



